கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு இன்று 222 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. காலை 7 மணியளவில் தொடங்கிய வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாநிலம் முழுவதும் 55 ஆயிரத்து 600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், சுமார் 3500 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் 2.44 கோடி, மாற்றுபாலினத்தவர்கள் 4552 பேர் என உள்ளனர்.
தேர்தல் தொடங்கிய நிலையில், ஷிமோகா அருகே ஷிகார்பூரில் பாஜக முதல்வர் வேட்பாளர் பி.எஸ்.எடியூரப்பா வாக்களித்தார். தொடர்ந்து, புட்டூரில் மத்திய அமைச்சரும், முன்னாள் முதல்வருமான சதானந்த கவுடா வாக்களித்தார்.
இதற்கிடையே, ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததை அடுத்து, அந்த தொகுதிக்கும், வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கும் தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் எதிரொலியாக, மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.