தெஹ்ரான்: ஈரானின் தென்கிழக்கு பகுதியில் ரிக்டர் அளவில் 6.1 என்ற புள்ளியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஈரானின் தலைநகரான தெஹ்ராவில் உள்ள தென்கிழக்கு பகுதியில் சுமார் 1100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஹோஜேடெக் என்ற நகரில் நேற்றிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஈரான், ஈராக் உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீட்டில் இருந்த மக்கள் வெளியே வந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
மீண்டும் சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளுக்குள் செல்லாமல் சாலைகளிலே இருந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து விவரம் தெரியவில்லை. இருப்பினும், வீடு, கட்டிட சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், 42 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.