சீன விமானம் ஒன்று வானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானிகள் அறையின் ஜன்னல் உடைந்ததால், உதவி விமானி காயம் அடைந்தார்.
கடந்த திங்களன்று சீனாவின் கோங்சியங் நகரிலிருந்து திபெத் தலைநகர் லாசாவுக்கு ஸிச்சுவான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. புறப்பட்டு அரைமணி நேரம் கழித்து 32 ஆயிரம் அடி உயரத்தில் இந்த ஏர்பஸ் ஏ319 ரக விமானம் பறந்து கொண்டிருந்தபோது, விமானிகள் அறையில் (காக்பிட்) பெருத்த சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து வலப்பக்க ஜன்னல் உடைந்ததாகவும் கூறிய விமானி லியூ சுவாஞ்ஜியான், மயிர்கூச்செறிய வைக்கத்தக்க அனுபவத்தை கீழ்க்காணும் வண்ணம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“திடீரென விமானிகள் அறையினுள் காற்றழுத்தம் தாறுமாறாகியது; வெப்பநிலையும் குறைந்தது. பொருட்கள் பறக்க ஆரம்பித்தன. கருவிகளின் இயக்கம் பாதிப்புற்றது. விமானம் குலுங்கியது. விமானத்தின் இயக்கம் குறித்த எந்த அளவீட்டையும் என்னால் படிக்க இயலவில்லை. உடைந்த ஜன்னல் வழியாக, என்னுடைய உதவி விமானி வெளியே இழுக்கப்பட்டார். அவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததால், வெளியே விழவில்லை. உடலில் சிராய்ப்புகளும், மணிக்கட்டில் சுளுக்கும் ஏற்பட்டுள்ளது”
விமானம் கெங்க்டூ நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் இன்னொரு பணியாளருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் 119 பயணியரும் காயம் இல்லாமல் தப்பினர். 2011 ஜூலை முதல் இயங்கி வரும் இவ்விமானம் இதுவரை 19,912 மணி நேரம் பறந்துள்ளது என்று சீன விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.