தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து சான் பிரான்சிஸ்கோவில் போராட்டம்!

Advertisement

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், தூத்துக்குடி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும், சான்பிரான்சிஸ்கோவில் அமெரிக்க வாழ் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் முதல் அம்மாவட்ட மக்கள் போராடி வந்தனர். கடந்த 22ம் தேதி 100வது நாளான அன்று பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசாரின் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்கு மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவில் பல்வேறு மாகாணத்தில் வசிக்கும் தமிழர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் சுமார் 200 பேர் தூத்துக்குடி பொது மக்கள் படுகொலைக்கு எதிராகவும், வேதாந்தா தாமிர உருக்காலையை மூடக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதன் பின்னர், பேராட்டத்தின் முடிவில் தமிழர்கள் கையெழுத்திட்ட மனுவை இந்திய தூதரக அதிகாரி திரு. வெங்கட் அவர்களிடம் அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட வெங்கட், மக்களின் உணர்வுகளை இந்திய அரசுக்கு தெரிவிப்போம் என அவர் உறுதி அளித்தார். இந்த போராட்ட தகவலை வளைகுடா தமிழர்கள் குழு முகநூல் மூலம் தமிழர்களுக்கு கொண்டுசேர்க்கும் உதவியை செய்து வருகிறது.

இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசானையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்று நிர்வார்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, ஆலைக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

Advertisement
/body>