வெளிநாட்டினர் அமெரிக்காவில் முதலீடு செய்வதன் மூலம் பெறக்கூடிய ஈபி5 என்னும் விசா, கோல்டன் விசா என்றும் அறியப்படுகிறது.
இந்த விசா உள்ளவர்கள் கிரீன்கார்டு பெற விண்ணப்பிக்க முடியும். இதை நீட்டிப்பதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாக செப்டம்பர் 30 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாவுக்கான முதலீட்டு தொகை அதிகரிக்கப்படலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
1990-ம் ஆண்டு முதல் கோல்டன் விசா (ஈபி5) வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்புக்கென குறிக்கப்பட்ட இரு பகுதிகளில் ஐந்து லட்சம் டாலர்கள் அல்லது குறிக்கப்படாத பகுதிகளில் 10 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வண்ணம் பத்து லட்சம் டாலர் முதலீடு செய்வதன் மூலம் இந்த விசாவை பெறுவதற்கு வாய்ப்பு இருந்து வந்தது. இவ்விசா உள்ளவர்கள் ஹெச்-1பி விசா உள்ளவர்களை விட குறைவான காலத்தில் அமெரிக்க குடியுரிமையை பெற முடியும்.
ஆண்டுதோறும் ஒரு நாட்டுக்கு அதிகபட்சமாக 700 வீதம் 10,000 ஈபி5 விசாக்கள் அமெரிக்காவில் வழங்கப்படுகின்றன. சீனா, வியட்நாம் நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் இந்த விசாவினை அதிக அளவில் வாங்குகின்றனர். சர்வதேச அளவில் கோல்டன் விசா பெறும் வாய்ப்பு 92.4 விழுக்காடு. ஆனால், விண்ணப்பிக்கும் இந்தியர்களுள் 64 விழுக்காட்டினரே விசா பெறுகின்றனர்.
‘நாட்டின் குடியுரிமை விற்கப்படுகிறது' என்று இந்த விசாவை குறித்து மாற்றுக்கருத்துகளும் வைக்கப்படுகின்றன. தற்போது ஈபி5 விசாவுக்கான முதலீட்டு மதிப்பு 5 லட்சம் டாலரிலிருந்து 13 லட்சத்து 50 ஆயிரம் டாலராகவும், 10 லட்சம் டாலர் பிரிவு, 18 லட்சம் டாலராகவும் உயர்த்தப்படலாம் என்றும், இந்த மாற்றங்களை அமெரிக்க நிர்வாகம் மற்றும் நிதி அறிக்கைக்கான அலுவலகம் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கக்கூடும் என்றும் முதலீட்டு துறை வல்லுநர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு -thesubeditor.com