தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு!

May 28, 2018, 18:33 PM IST

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை யடுத்து, ஆலைக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ம் தேதி மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

144 தடை உத்தரவு வாபஸ் பெற்ற நிலையில், நேற்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, இன்று காலை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மருத்துவமனையில் உள்ளவர்களை சந்தித்தனர்.

அப்போது, உயிரிந்தோர் மற்றும் படுகாயமடைந்தவர்களின் உறவினர்கள், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொண்டனர். இதற்கு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்தார்.

இதைதொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் உயரதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டது. பொது மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழக அரசு அரசாணை வெளியிட்ட சில மணி நேரங்களில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்று நிர்வாகிகளிடம் பேசினார். அதன்பிறகு, ஆலைக்கு சீல் வைத்து அரசின் நோட்டீசை வாயிற்கதவில் ஒட்டி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் அம்மாவட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை