அமெரிக்காவில் வேலை செய்ய கூடுதலாக 15,000 விசாக்கள்!

அமெரிக்காவில் வேலை - கூடுதலாக 15,000 விசாக்கள்

May 29, 2018, 20:41 PM IST

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு திறமைமிகு தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ஹெச்-1பி விசா வழங்கப்படுகிறது.

ஹெச்-1பி விசா வழங்குவதற்கான விதிமுறைகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஹெச்-1பி விசாதாரர்களின் கணவர் மற்றும் மனைவிக்கு ஹெச்-4 விசா வழங்கப்படுகிறது. இந்த விசா உள்ளவர்கள் அமெரிக்காவில் பணியாற்ற முந்தைய ஒபாமா அரசு அனுமதி வழங்கி ஹெச்-4 ஈஏடி விசா கொடுத்து வந்தது. தற்போது ஹெச்-4 விசா உள்ளவர்கள் அமெரிக்காவில் பணியாற்றும் உரிமையை ரத்து செய்வதற்கான முயற்சியில் ட்ரம்ப் அரசு ஈடுபட்டுள்ளது.

திறமைமிகு பணியாளர்களுக்கான விசா வழங்குவதில் கெடுபிடி, ஹெச்-4 விசா உள்ளவர்கள் பணியாற்றும் உரிமை ரத்து ஆகியவற்றால் அமெரிக்க நிறுவனங்களில் பணியாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு, தொழில்கள் நலியும் ஆபத்து உருவாகியுள்ளது. ஆகவே, விவசாயமற்ற வேலைகளுக்கு தற்காலிகமாக வெளிநாட்டு பணியாளர்களை அமர்த்தும் ஹெச்-2பி விசாக்களின் எண்ணிக்கை உயர்த்துவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

தொழிலாளர் துறை செயலர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வர்த்தக நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசித்தபிறகு அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை செயலர் கிறிஸ்ட்ஜென் நெய்ல்சன் இதை அறிவித்துள்ளார்.

2018 நிதி ஆண்டுக்கான 66,000 ஹெச்-2பி விசாக்கள் தவிர கூடுதலாக 15,000 விசாக்கள் வழங்கப்பட உள்ளன. முதல் அரையாண்டில் 33,000 விசாக்களும் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் அடுத்த 33,000 விசாக்களும் வழங்கப்பட உள்ளன.

ஹெச்-2பி விசாதாரரின் கணவர் அல்லது மனைவி, 21 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் ஹெச்-4 விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். விசாதாரரை தவிர குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் அமெரிக்காவில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று அமெரிக்க குடியேற்றம் மற்றும் குடிபுகல் (யூஎஸ்சிஐஎஸ்) துறையின் இணையதளம் தெரிவிக்கிறது. தகுதியுள்ளவர்கள் இந்த வாரம் முதல் ஹெச்-2பி விசா கோரி விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading அமெரிக்காவில் வேலை செய்ய கூடுதலாக 15,000 விசாக்கள்! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை