ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 180 அகதிகள் பயணித்த படகு திடீரென கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 47 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியேறுகின்றனர்.
தினமும் அளவுக்கு அதிகமான அகதிகளை ஏற்றிச்செல்வதால் படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. இது பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதுவரை ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வந்துள்ள மக்களின் எண்ணிக்கை 25 லட்சமாக எட்டியுள்ளது.
லிபியா நாட்டின் வழியாக கண்காணிப்பு அதிகமாக இருப்பதால், துனிசா கடற்பகுதி வழியாக இவர்கள் இத்தாலியை நோக்கிச் செல்கின்றனர்.
அந்த வகையில், நேற்று முன்தினம் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 180 அகதிகள் துனியா கடற்பகுதி வழியாக படகில் சென்றனர். அப்போது, அதிக எடை தாங்காமல் படகு திடீரென கவிழ்ந்தது. இதில், முதற்கட்ட தகவலில் 35 பேர் பலியானதாக கூறப்பட்டது. இதன்பிறகு, மேற்கொண்டு 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 67 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கடலில் மூழ்கி காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்டு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதன் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.