அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டிலிருந்து பணியமர்த்தும் திறன்மிகு பணியாளர்களுக்கு ஹெச்-1பி விசாவினை அமெரிக்க அரசிடம் முறையாக விண்ணப்பித்து பெற வேண்டும்.
அமெரிக்க நாடாளுமன்றம் ஆண்டுக்கு 65,000 ஹெச்-1பி விசாக்கள் வழங்கப்பட அனுமதித்துள்ளது. இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில் இந்த ஹெச்-1பி விசாதான் பிரபலமாக உள்ளது.
டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு கடந்த ஆண்டு 'அமெரிக்க பொருட்களை வாங்க வேண்டும்; அமெரிக்கர்களை பணியமர்த்த வேண்டும்' என்ற நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டார்.
அதன்படி, அமெரிக்கர்களுக்கான பணிவாய்ப்புகள் பறிக்கப்படுவதை தடுக்கும்படி, வெளிநாட்டுப் பணியாளர்கள் அதிகமுள்ள நிறுவனங்களை கண்டறியவும், விசா பெற்று வேறு நிறுவனங்களில் பணியாளர்களை பணிபுரிய வைத்துள்ள நிறுவனங்களின் விவரங்களை தெரிந்து கொள்ளவும், கிடைக்கும் விவரங்களை கொண்டு அடிப்படை வணிக செயல்பாடுகளை அறிந்து கொள்ள இயலாத நிறுவனங்களைப் பற்றிய விவரங்களை பெறவும் ஏதுவாக புகார் கொடுப்பதற்காக இரு மின்னஞ்சல் முகவரிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மோசடிகளை கண்டறிதல் மற்றும் தேசிய பாதுகாப்புக்கான அமெரிக்க இயக்குநரகம் ஹெச்-1பி மற்றும் ஹெச்-2பி விசா மோசடி மற்றும் முறைகேடாக பயன்படுத்தல் குறித்து புகார் அளிக்க reporth1babuse@uscis.dhs.gov மற்றும் reportH2babuse@uscis.dhs.gov என்ற மின்னஞ்சல் முகவரிகள் கொடுக்கப்பட்டிருந்தன.
மே மாதம் 21-ம் தேதி வரை 5,000-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக அமெரிக்க குடியேறுதல் மற்றும் குடிபுகல் துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.