வளைகுடாப் பகுதி தமிழ் மன்ற பெண்கள் மட்டும் கரம் கோர்த்து மகிழ்ந்த கலை நிகழ்ச்சி !!

Advertisement

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் 1980ம் ஆண்டுத் துவங்கப்பட்ட வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் இன்று வரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த 37 ஆண்டுகளாக, வளைகுடாப் பகுதி தமிழ் மக்களுக்குத் தேவையானவற்றை, சூழலுக்கு ஏற்ப சிறப்பாகச் செய்து வருவது தான் தமிழ் மன்றத்தின் வெற்றி என்கிறார்கள் வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் நிர்வாகிகள்.

புலம்பெயர்ந்து வாழும் வளைகுடாப் பகுதி தமிழ் மக்களுக்காகப் பல்வேறு நன்மைகளைச் செய்து வரும் தமிழ் மன்றம், முதன் முதலாகப் பெண்களுக்கு என்று பிரத்யேகமாகச் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்தனர். இதன் தொடர்பாக, தமிழ் மன்றம் 2018 நிர்வாகிகள், மகளிர் மட்டும் நிகழ்ச்சியினை நடத்துவதற்கு ”பெண்கள் விழாக்குழு”வினை ஏற்படுத்தினார்கள். அவ்விழாக்குழுவினர், மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு, கடந்த ஜூன் 3ம் தேதி அன்று மாலை 4 மணியளவில் ஃபிரீமாண்ட் நகரில் உள்ள இர்விங்டன் சமுதாயக் கூடத்தில், ”மகளிர் மட்டும்” என்ற நிகழ்ச்சியினை நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில், வளைகுடாப் பகுதியில் வாழும் பெண்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். புதுமையான நிகழ்வு என்பதால், நிறையப் புதிய பெண் உறுப்பினர்கள் கலந்து கொண்டது விழாக்குழுவினர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. மேலும் பெண்கள் விழாக்குழுவினர் அனைவரும் ஒரே ஆடையில் கலந்து கொண்டது, பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தியது.

மேலும், பெண்களுக்கான நடனம், சிறப்புப் பாடல், மகளிர் ஆடை அணிவகுப்பு, பாட்டுக்குப் பாட்டு மற்றும் இசை நாற்காலி உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் தங்களையே மறந்து மகிழ்ச்சியாக விளையாடி, தங்களது மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் போன்ற கவலைகளை மறந்து, மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாக ஒருமித்த குரலில் கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பாக, சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற உலக இளையோர் டேபிள் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க அணிக்காக விளையாடி, தங்கம் வென்ற, செல்வி.லாவண்யா மருதபாண்டியனுக்கு, பெண்கள் விழாக்குழுவினர், பொன்னாடை மற்றும் பூங்கொத்து கொடுத்து கவுரவப்படுத்தினர். மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகை திருமதி.பல்லவி அவர்கள், செல்வி.லாவண்யா மருதபாண்டியனுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

மேலும், வருகின்ற ஜூன் 29-ஆம் தேதி முதல் ஜூலை 1 வரை, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் மாநகரத்தில் வட அமெரிக்கத் தமிழ் பேரவையின் (FeTNA) 31-வது ஆண்டுத் தமிழ் விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. அதன் சார்பாக, திருமதி.ஆதிரை பாஸ்கரன் (துணைத் தலைவர், Metro Plex தமிழ் சங்கம்) மற்றும் திருமதி.கெவின்மொழி (Cladwell Youth representative) இருவரும் கலந்து கொண்டு பேரவையின் நிகழ்ச்சியினைப் பற்றி விவரித்தார்கள்.

விழாவின் இறுதியில், விழாக்குழுவினர் அனைவருக்கும், தமிழ் மன்றம் 2018 நிர்வாகிகளின் துணைவியார்கள், நன்றி தெரிவித்தனர். இரவு 9-மணியளவில், மகளிர் மட்டும் விழா, இனிதே நிறைவு பெற்றது.

மேலும், இது போன்ற பல நிகழ்வுகளைப் பற்றி அறிய கீழ்காணும் இணையத்தில் இணையுங்கள்
https://www.bayareatamilmanram.org/,

https://www.facebook.com/bayareatamilmanram/

 - thesubeditor.com

Advertisement
/body>