இருபதாம் நூற்றாண்டில் உலகின் ஒரே வல்லரசாக ஆதிக்கம் செலுத்தி வந்தது அமெரிக்கா. ஆனால், 21-ம் நூற்றாண்டில் பல ஆசிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவுடன் வல்லரசுப் பட்டத்தை பங்கிட்டுக்கொள்ள போட்டா போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ஹைப்பர்சோனிக் எனப்படும் கண்ணிமைக்கும் நேரத்தில் பல மைல்கள் போகக் கூடிய ஆயுத தயாரிப்பில் அமெரிக்காவை ரஷ்யா, சீனா முந்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது உலகின் பெரும் பொறுப்பில் இருக்கும் அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சாதரண ஏவுகணைகள் தான் உலகின் பெரும்பான்மையான நாடுகள் தங்கள் ராணுவ ஆயுத இருப்பில் அதிகம் வைத்திருக்கின்றன. இது குறிப்பிட்ட வழியில், சுமாரான வேகத்தில் செல்லக் கூடியவை. இந்த ஏவுகணைகள் ரேடாரில் தென்படுவதற்கான வாய்ப்பு அதிகம். ஆனால், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்பது ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு அதிகமாக செல்லக் கூடியவை.
இதனால் இதை எதிரிகள் கண்டுபிடித்து அழிப்பது என்பது கடினம். ஆயுதங்கள் தயாரிப்பில் தற்போது வல்லரசு நாடுகளின் கவனம் இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிப்பதில் தான் இருக்கிறது. இதில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அமெரிக்காவைவிட பல படிகள் முன்னே உள்ளதாக பென்டகனில் இருந்து நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இது அமெரிக்காவுக்கும் அதன் ராணுவத்துக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாம்.