இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளார்.
சீனாவின் கிங்டாவோவுக்குச் செல்லும் மோடி அங்கு நடக்கவுள்ள ஷாங்காய் கோ-ஆப்ரேஷன் ஆர்கனைசேஷன் அல்லது எஸ்.சி.ஓ மாநாட்டில் கலந்து கொள்கிறார். கடந்த ஆண்டு இந்த மாநாட்டில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முழு நேர உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, இந்த ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் பிரதமர் மோடியே செல்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் மோடி, தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சீன ஆதிபர் ஜின்பிங்-ஐ பிரதமர் மோடி சந்திப்பார் என்று கூறப்பட்டு உள்ளது.
குறிப்பாக, இரு நாட்டுக்கும் இடையில் உள்ள வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து நிறைய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மோடி மேற்கொள்ளும் இரண்டாவது சீனப் பயணம் இது.
எஸ்.சி.ஓ மாநாட்டில் 8 முழு நேர உறுப்பினர்கள், 4 பார்வையிடும் உறுப்பினர்கள், மேலும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்வர். முக்கியமாக, தீவிரவாதத்துக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.