கனடா டூ நரகம் - மன்னிப்பு கோரினார் டிரம்ப் ஆலோசகர்

by Isaivaani, Jun 13, 2018, 08:13 AM IST
ஜி-7 உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வர்த்தக கட்டண கொள்கை குறித்து அதிருப்தி தெரிவித்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் டிரூட்யூ.
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீது விதிக்கப்படும் கட்டணங்கள் குறித்து அவர் கவலை தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, கனடா பிரதமரை மோசமான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார்.
 
"கனடா வர்த்தக அரங்கிலிருந்து புறந்தள்ளப்படக்கூடாது. அதிபர் டிரம்ப் விதிக்கும் கட்டணங்களுக்கு பதில் கூறும் வகையில் கனடா நடவடிக்கை எடுக்கும்," என்று கனடா பிரதமர் ஜஸ்டின் டிரூட்யூ தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வண்ணமாக, செய்தி நிறுவனமொன்றிற்கு அளித்த பேட்டியில், "அதிபர் டிரம்ப்பின் ராஜரீக தன்மையின்மேல் அவநம்பிக்கை கொள்பவர்களுக்கும், அவரை முதுகில் குத்த முயற்சிப்போருக்கும் நரகத்தில் சிறப்பான ஓரிடம் உண்டு," என்று பீட்டர் நவரோ கூறினார். நவரோவின் கருத்தை ஆதரித்து, டிரம்ப்பின் பொருளாதார உயர் ஆலோசகர் லாரி குட்லோ, "டிரூட்யூவின் கருத்துகள் துரோகமானவை," என கூறியிருந்தார்.
 
பீட்டர் நவரோவின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்தது. அமெரிக்காவின் பல்வேறு செனட்டர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் செவ்வாய் அன்று, செய்தி நிறுவனம் நடத்திய கருத்தரங்கம் ஒன்றில் தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் பீட்டர் நவரோ.
 
"நான் பொருத்தமற்ற வார்த்தைகளை பயன்படுத்திவிட்டேன். நான் சொல்ல வந்த கருத்தை அவை வலுவிழக்கச் செய்து விட்டதன. தவறு என்னுடையதுதான். அதற்காக வருந்துகிறேன்," என்று அவர் கூறியுள்ளார்.

You'r reading கனடா டூ நரகம் - மன்னிப்பு கோரினார் டிரம்ப் ஆலோசகர் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை