ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருப்பவர் சாந்தா கோச்சார். கடந்த 2012-ம் ஆண்டு வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கியதில் ஆதாயநோக்கம் இருப்பதாக சாந்தா கோச்சாரின்மேல் புகார் எழுந்தது.
வீடியோகான் நிறுவனத்திற்கு 3,250 கோடி ரூபாய் ஐசிஐசிஐ வங்கி கடன் வழங்க சாந்தா கோச்சார் அனுமதி வழங்கினார். அந்தக் கடன் வழங்கப்பட்ட ஆறு மாத காலத்திற்கு பிறகு, சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனம் ஒன்றில் வீடியோகான் நிறுவனத்தின் வேணுகோபால் தூத், கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்துள்ளார். இது குறித்து கேள்விகள் எழுந்தபோது, தங்கள் அதிகாரிமேல் முழு நம்பிக்கை வைத்திருப்பதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்திருந்தது.
கடன் வழங்தியதில் வங்கிக்கான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாருக்கு பதிலளிக்கும் வண்ணம் கடந்த மே 30-ம் தேதி, சாந்தா கோச்சாருக்கு ஆதாய நோக்கம் இருந்ததா என்பது குறித்து விரிவான விசாரணை செய்யப்படும் என்று வங்கி நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்தியாவின் நிதி அமைச்சகத்திற்கு தற்போது பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல், "ஐசிஐசிஐ வங்கி நல்லமுறையில் இயங்கி கொண்டிருக்கிறது. புகார்கள் குறித்து அதன் உள்அலுவலக மற்றும் அலுவலகத்திற்கு வெளியேயான குழுக்கள் விசாரணை நடத்தும்," என்று கூறியிருந்தார்.
மும்பை பங்கு சந்தை கோச்சார் விவகாரம் குறித்து வங்கி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருந்தது. இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி குறித்து அமெரிக்காவின் பங்கு பரிமாற்ற ஆணையம் விசாரிப்பதாக தகவல் பரவியது. "ஐசிஐசிஐ பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் பெரிய வங்கி. அமெரிக்காவின் பங்கு பரிமாற்ற ஆணையம் உள்பட பல்வேறு ஒழுங்கு ஆணையங்களுடன் இணைந்து பணியாற்றும் சூழல் வரும். இதுவரைக்கும் தலைமை செயல் அதிகாரி மீதான அமெரிக்க ஆணைய விசாரணை குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை," என்று ஐசிஐசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.