அமெரிக்காவின் சிகாகோவில் துப்பாக்கியால் சுடப்பட்ட இளைஞர் உயிரிழந்து விட்டதாக எண்ணி துணைமருத்துவ குழுவினர், அவரை மூடிப்போட்டனர். மருத்துவ சிகிச்சையின்றி அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சிகாகோ நகரின் மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் எரின் கேரி என்ற 17 வயது இளைஞன், தலையில் பல இடங்களில் குண்டு காயமுற்றுள்ளான். இந்த சம்பவத்தில் அவன் உயிரிழந்து விட்டதாக துணைமருத்துவ குழுவினர் எண்ணியுள்ளனர்.
ஆகவே, அவன் உடலை மூடிவிட்டு, அருகே குண்டு காயமுற்றிருந்த மற்றொருவரை கவனிக்கச் சென்று விட்டனர். உடல் துணியினால் மூடப்பட்ட நிலையில், எரின் கேரியின் கைகள் மற்றும் தலை அசைந்ததை கவனித்தவர்கள்.
"அவர் உயிரோடு இருக்கிறார்" என்று மருத்துவ குழுவினரிடம் கூறியுள்ளனர். நெடுநேரம் கடந்த நிலையில், துணைமருத்துவகுழுவினர், எரின் கேரிக்கு முதலுதவி செய்து, மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காத நிலையில் செவ்வாயன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:19 மணிக்கு எரின் கேரி உயிரிழந்துள்ளார்.
எரின் கேரி, தலையில் பலத்த காயமுற்றதால் இறந்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், அவர் இறந்து கிடந்த இடத்தினருகே மேக் 10 வகை இயந்திர கைத்துப்பாக்கி கிடந்ததாக தெரிவித்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.