ஃபேஸ்புக் (Facebook) நிறுவனம் தனது பயனர் தகவல்களை சீன நிறுவனங்கள் உட்பட 52 நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற ஆற்றல் மற்றும் வர்த்தக குழுவிடம் (House Energy & Commerce Committee)அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற குழுவின் முன்பு ஃபேஸ்புக்கின் மார்க் ஸக்கர்பெர்க் (Mark Zuckerberg) முன்னிலையானபோது, அவர் பதிலளிக்காத கேள்விகளுக்கான பதிலை 452 பக்க ஆவணமாக சமர்ப்பித்தார். அதற்கு ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த 747 பக்க அறிக்கை வெளிவந்துள்ளது.
அலிபாபா, ஃபாவே (Huawei), லெனோவா மற்றும் ஆப்போ உள்ளிட்ட 52 சீன நிறுவனங்களுக்கு ஃபேஸ்புக் தகவல்களை பகிர்ந்து கொண்டிருப்பது இந்த அறிக்கையின் வாயிலாக தெரிய வந்துள்ளது.
இவற்றுள் ஹெச்பி/பாம் HP/Palm)மற்றும் எங் ( Inq) உள்ளிட்ட 38 நிறுவனங்கள், இது தொடர்பான வணிக செயல்பாடுகளை கைவிட்டுள்ள காரணத்தால் தற்போது அவற்றுடன் தகவல் பரிமாற்றம் இல்லை. இந்த ஆண்டு ஜூலை மாதம் மேலும் 7 நிறுவனங்கள், வரும் அக்டோபர் மாதம் மேலும் ஒன்று என எட்டு நிறுவனங்களோடு உள்ள பரிமாற்றம் முடிவுக்கு வர உள்ளது.
ஆப்பிள், அமேசான் மற்றும் டோபி நிறுவனங்களுடன் பங்களிப்பு தொடரும் என்றும் அலிபாபா, மொஸில்லா மற்றும் ஆப்ரா (Opera) ஆகிய நிறுவனங்கள், பயனர்களின் நண்பர்களின் தகவல்களை தொடர்பு கொள்ளமுடியாதபடி இணைந்து செயல்படும் என்றும் இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது. இது தவிர 61 மூன்றாவது நபர் செயலி உருவாக்க நிறுவனங்களோடு தங்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் ஃபேஸ்புக் கூறியுள்ளது.
அமெரிக்க நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்கும் பெடரல் டிரேட் ஆணையத்தின் (Federal Trade Commission) விதிகளை தாண்டி தகவல்களை பரிமாறும்படி, சில சிக்கலான வார்த்தைகள் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
தகவல்கள் பரிமாறப்படும் முன்பதாக, பயனரின் ஒப்புதலை பெற வேண்டியதை தவிர்க்கக்கூடிய அளவில் இவ்வார்த்தைகள் உள்ளன. கலிபோர்னியாவின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் அன்னா எஸ்ஸோ பயனர்களிடமிருந்து திரட்டிய பல்வேறு கேள்விகளுக்கு இந்த அறிக்கை நேரடி பதிலை அளிக்கவில்லை. ஃபேஸ்புக்கின் இந்த விளக்கமும் பயனரின் தகவல் பரிமாற்றம் குறித்த விஷயத்தில் எல்லோரையும் திருப்திபடுத்துவதாய் அமையவில்லை.