மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசக் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நடவடிக்கை உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய நீதிமன்றத்துக்கு முன்னால் இன்று நிறுத்தப்பட்ட நஜீப், 10.4 மில்லியன் டாலர் பணத்தை ஊழல் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மூன்று வெவ்வேறு வழக்குகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்று நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 60 ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் தான் அவர் மலேசியாவில் நடந்த தேர்தலில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில், தற்போது ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை குறித்து கீடலின் ராக்யாத் என்கின்ற மலேசியாவின் ஆளுங்கட்சி, ‘எங்கள் நாட்டு வரலாற்றிலேயே ஒரு முன்னாள் பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. அதிகார துஷ்பிரயோகம் செய்யும் யாராக இருந்தாலும் அவர்களை இந்த நாட்டின் சட்டம் தண்டிக்காமல் விடாது என்பதற்கு நஜீப்பின் கைது சிறந்த உதாரணம்’ என்று கூறியுள்ளது.
இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் மலேசிய அரசு, நஜீப்பை நாட்டை விட்ட வெளியேற தடை விதித்திருந்தது. இந்த வழக்கில் நஜீப் மட்டுமின்றி, அவரின் மனைவி ரோஸ்மா மன்சூர் மற்றும் மிகவும் நெருக்கமான அரசியல் சகாக்கள் ஆகியோரும் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.