ஆஸ்திரேலியாவில் சுறா மீனுக்கு பெண் ஒருவர் உணவு கொடுக்க முயன்ற போது, அந்த சுறா மீன் உணவை கையோடு சேர்த்துக் கவ்வியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது.
கடந்த மே மாதம், ஆஸ்திரேலியாவின் டுகோங் பே-வில் இருக்கும் ஒரு பீச்சில் விடுமுறையை கொண்டாடியுள்ளார் மெலிசா பர்னிங். அங்கு தனது நண்பர்களுடன் படகில் கடலுக்குள் சென்றுள்ளார். அப்போது படகின் நுணியில் இருந்து சுறாக்களுக்கு உணவு கொடுக்க முயன்றுள்ளார். உணவை வைத்துக் கொண்டு நீரில் கையை ஆட்ட, ஒரு சுறா கூட்டம் படகை வட்டமிட ஆரம்பித்தது.
அதில் ஒரு சுறா மெதுவாக மெலிசாவுக்கு அருகில் வந்தது. பின்னர் யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்த சுறா, மெலிசாவின் கையைப் பிடித்து கடலுக்குள் இழுத்தது. அருகிலிருந்து மெலிசாவின் நண்பர், உடனடியாக அவரை இழுத்ததால் பெரும் ஆபத்திலிருந்து தப்பித்தார். ஆனால், இந்த விபத்து நடந்தததால் அவரின் கை விரல் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது.
சம்பவம் குறித்து மெலிசா, ‘சுறாவிடமிருந்து தப்பித்து படகில் ஏரியவுடன், என் விரல் காலி என்று நினைத்தேன். சுறா விரலைக் கடிக்கும் போது எலும்பு நொறுங்குவது போல் இருந்தது’ என்கிறார் புன்னகையுடன். சம்பவம் நடந்த பிறகும் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமைறையைக் கொண்டாடியுள்ளார் மெலிசா.
அதன் பிறகு தான் தேவைப்பட்ட சிகிச்சையை எடுத்துள்ளார். இந்த சுறா கடி எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என்றும் தொடர்ந்து பல இடங்களுக்குப் பயணிப்பேன் என்றும் உற்சாகம் ததும்ப கூறியுள்ளார் மெலிசா. மெலிசா, சுறாவிடம் கடி படும் போது, உடனிருந்த அவர் நண்பர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது வைரலாகி வருகிறது.