அமெரிக்க அரசாங்கம் 300 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு 10 சதவிகித வரியை அதிகரிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.
எஃகு, அலுமினியம், நிலக்கரி, ரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கும், ஃபர்னிச்சர், பெட்டிகள், பேக்ஸ், சைக்கிள், டாய்லெட் பேப்பர் அடங்கிய அன்றாட பொருட்களுக்கும் இந்த வரி விதிப்புப் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
உலகின் இரண்டு மிகப் பெரிய பொருளாதார நாடுகள் இப்படி வர்த்தகப் போர் புரிவது, சர்வதேச சந்தையை பாதிக்கும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர். இந்த விவகாரம் குறித்து சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 500 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் எதிர்கட்சியினர் ட்ரம்பின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளனர். குறிப்பாக, ‘வரி அதிகரிப்பு என்பது மக்களின் தலையில் தான் வந்து விழும். சீனப் பொருட்களுக்கு வரி அதிகரிப்பு செய்தால், அது ட்ரம்ப் அரசு மக்களுக்குச் செய்யும் துரோகம் ஆகும்’ என்று கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.