அரசு பள்ளியில் படிக்கும் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஆரணி பகுதியில் உள்ள அருணகிரி சத்திரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துக் கொண்டு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
விழாவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகத்தில், 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவரப்படும். ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டங்கள் குறித்து கற்பித்தல் பயிற்சி அளிக்கப்படும்.
ஜிஎஸ்டியை கையாளும் வகையில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி அளிக்கப்படும். மத்திய அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் உள்ளன. 1,6,9ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தில் செல்போனில் பாடங்களை பதிவிறக்கம் செய்து பாடம் நடத்தும் முறை கொண்டு வரப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.