பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாங்குப்பதிவு தொடங்கியது.
பாகிஸ்தானில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி ஆட்சியை பிடித்து வெற்றிப்பெற்றது. கடந்த 2013ம் ஆண்டு தொடங்கிய இந்த ஆட்சி காலம் ஐந்து ஆண்டுகள் முடிந்த நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுக்கும் வகையில் பாகிஸ்தானில் இன்று பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மொத்த 342 உறுப்பினர்கள் எண்ணிக்கையில், ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ 172 இடங்களில் வெல்ல வேண்டும். மீதமுள்ள 70 இடங்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மை வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தேர்தலுடன், நான்கு மாகாண சட்டமன்ற தேர்தலும் இன்று நடத்தப்படுகிறது. இதனால், நாடு முழுவதும் சுமார் 10 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.
இந்த தேர்தலில் நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 3459 வேட்பாளர்களும், 577 மாகாண சட்டமன்ற தொகுதிகளில் 8396 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இதற்காக, 89 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரையில் நடைபெறும என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் மற்றும் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ&இன்சாப் கட்சிக்கும் கடுமையாக போட்டி நிலவுகிறது. இதில், இம்ரான் கான் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், பரபரப்பாக இயங்கி வரும் வாக்குச்சாவடிகளில் பொது மக்கள் வாக்குப்பதிவு செய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக பலத்த போலீஸ் மற்றும் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சமீபத்தில், பிரசார கூட்டம் ஒன்றில் குண்டு வெடித்து 151 பேர் பலியான சம்பவம் குறிப்பிடத்தக்கது.