சுவீடன் சில்லறை விற்பனை பெருநிறுவனமான 'ஐக்கியா' இந்தியாவில் தனது முதல் கடையை ஹைதராபாத் புறநகரில் 13 ஏக்கர் பரப்பில் ஜூலை 9-ம் தேதி திறக்கிறது.
வீட்டு உபயோகம் மற்றும் தளவாட (ஃபர்னிச்சர்) சாமான்களின் சில்லறை விற்பனை நிறுவனம் ஐக்கியா. கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சந்தையை ஆய்வு செய்த ஐக்கியா நிறுவனம், தற்போது தன் முதல் கடையை 4 லட்சம் சதுர அடி பரப்பில் திறக்கிறது. இக்கடையில் ஏறத்தாழ 7,500 வகை பொருட்கள் விற்கப்படுமென்றும், அவற்றுள் 1,000 பொருட்கள் ரூ.200க்கும் குறைவான விலை கொண்டவை என்றும் கூறப்படுகிறது. வரும் 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 25 விற்பனை நிலையங்களை திறப்பதற்கு ஐக்கியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வளர்ந்து வரும் இந்தியாவின் நடுத்தர மக்களின் சந்தை 2022ம் ஆண்டில் அமெரிக்காவின் சந்தையின் அளவைக் காட்டிலும் விரிந்துவிடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. "மக்களின் வருமானம் அதிகரிப்பதால், இந்தியாவின் சந்தையை நிறுவனங்களை கவர்ந்திழுப்பதாக மாறி வருகிறது," என்று பெங்களூருவை சேர்ந்த வர்த்த ஆய்வாளர் சௌம்யா ஆதிராஜூ கூறியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய தளவாட சில்லறை விற்பனை நிறுவனமான ஐக்கியா, இந்தியாவில் தனது முதற்கட்ட பணிகளுக்கென்று ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் (10 பில்லியன் ரூபாய்) முதலீடு செய்துள்ளது.
அடுத்த ஆண்டிள் தொடக்கத்தில் மும்பையில் ஒரு கடையையும் அதைத் தொடர்ந்து பெங்களூரு நகர்ப்புறம், டெல்லி பெருநகரத்திலும் ஐக்கியா கடைகளை திறக்க இருக்கிறது. சென்னை, கொல்கத்தா, அஹமதாபாத், சூரத் மற்றும் பூனாவிலும் கடைகளை அமைக்க திட்டம் உள்ளது. பிலிப்பைன்ஸ், வியட்நாமில் புதிய கடைகளும், பாங்காக், தாய்லாந்தில் கூடுதல் கடைகளும் வரும் ஆண்டுகளில் திறக்கப்படவுள்ளன.