கேரள வெள்ளம் - வேலையை பறித்த ஃபேஸ்புக் கிண்டல்

by SAM ASIR, Aug 21, 2018, 09:24 AM IST
வளைகுடா நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்தவர், கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கேலி செய்து அவதூறான கருத்தினை முகநூலில் பதிவு செய்துள்ளார். அது தெரிய வந்ததும் அவர் பணி செய்த நிறுவனம் அவரை வேலையிலிருந்து தூக்கிவிட்டது.
ராகுல் சேரு பலயாட்டு என்பவர் கேரளாவைச் சேர்ந்தவர். அவர் லுலு குழுமம் என்னும் வளைகுடா நிறுவனத்தின் ஓமன் நாட்டு கிளையில் காசாளராக வேலை பார்த்து வந்தார். 
 
மாநில முதல்வர் பினராயி விஜயன் கணக்குப்படி, கேரள மாநிலம் வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டு, ஏறத்தாழ 400 பேர் உயிரிழந்துள்ளனர். 19,512 கோடி மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு தீவிரமான மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.
 
அவர் பணியாற்றும் லுலு நிறுவனத்தின் முதலாளி எம்.ஏ. யூசுப் அலியும் கேரளாவை சேர்ந்தவர்தாம். வெள்ள நிவாரண பணிகளுக்கென அவர் 9.23 மில்லியன் அமீரக திர்ஹாம் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ 17 கோடியே 50 லட்சம் ரூபாய்) வழங்கியுள்ள நிலையில் ராகுல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களின் சுகாதார தேவை பற்றி ராகுல் தமது ஃபேஸ்புக் கணக்கில் கேலியாக அவதூறான கருத்தினை பதிவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து ஞாயிறன்று ராகுலை அவரது நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
 
"வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தைக் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தினை ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ள காரணத்தால் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுகிறீர்கள். அலுவலக ரீதியான பொறுப்புகள் அனைத்தையும் உங்கள் மேலாளர் வசம் ஒப்படைத்து விட்டு, நிதித்துறையை அணுகி பணப்பலன்களை பெற்றுக்கொள்ளவும்" என்று அவரது பணி நீக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
லுலு குழுமத்தின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி நந்தகுமார், "இதுபோன்ற நிலைமை ஏற்படும்போது, சமுதாயத்தைக் குறித்த நிறுவனத்தின் நிலைப்பாடு என்ன என்பதை குறித்த தெளிவான செய்தியை இதன் மூலம் வெளியிட்டுள்ளோம். எங்கள் நிறுவனம் எப்போதும் மனிதநேய கருத்துக்களையும் நெறிமுறைகளையும் உயர்த்திப் பிடிக்கும்.
 
அதற்காகவே அவரை உடனடி பணிநீக்கம் செய்துள்ளோம்," என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் பகிர்ந்து கொண்ட கருத்துக்காக முகநூலில் வருத்தம் தெரிவித்துள்ள ராகுல், மதுபோதையில் தவறான கருத்தை பதிவு செய்துவிட்டதாகவும், அதற்காக மனம் வருந்துவதாகவும் கூறியுள்ளார்.

You'r reading கேரள வெள்ளம் - வேலையை பறித்த ஃபேஸ்புக் கிண்டல் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை