வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது.
கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரள மாநிலத்தில், வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்தது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம் அடைந்தன. அந்த மாநிலத்திற்கு பிற மாநிலங்கள் உதவிகரம் நீட்டி வருகிறது.
இதனிடையே, கேரளா கனமழை வெள்ள பாதிப்பை அதிதீவிரமான இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேநேரம், கேரள வெள்ள சேதத்தை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இது ஒரு புறம் இருக்க, 11 நாட்களுக்கு பிறகு கேரள மாநிலத்தில் இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. நிலைமை சீரடைந்து வரும் பகுதிகளில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அங்கு வெள்ளம் வடிந்துள்ள பகுதிகளில் சாலைகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. எர்ணாகுளத்தில் உள்ள பூவாத்துசேரி பகுதியில் உள்ள முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பிய மக்கள், வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மக்களுக்கு நோய்கள் தாக்கம் உள்ளதா? என்பது குறித்து சோதனை செய்ய மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் இயல்பு நிலை படிப்படியாக திரும்புவதால், பல இடங்களில் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளது. கொச்சி விமான நிலையம் மூடப்பட்டதால், மாற்று ஏற்பாடாக கடற்படை தளத்தில், விமானங்கள் இயக்கப்படுகின்றன. ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு குழு, கடலோர காவல்படை, துணை ராணுவப்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு பக்கம் நிவாரணப்பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.