பிரிட்டன் சிறையில் இருக்கும் ஹர்பிரீத் ஆலேக் என்ற கைதி, எஞ்சிய சிறைவாசத்தை பஞ்சாபில் கழிக்க இருக்கிறார். சிறையில் எட்டு வருடங்களை கழித்துள்ள ஹர்பிரீத் ஆலேக்கிற்கு தற்போது நாற்பது வயதாகிறது.
வெளிநாடு வாழ் இந்தியரான ஹர்பிரீத் ஆலேக், பிரிட்டனில் பிறந்த இந்திய வம்சாவளியினரான கீதாவை திருமணம் செய்து கொண்டு லண்டனில் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கீதா, லண்டன் வாழ் இந்தியருக்கான வானொலி நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
கணவர் ஹர்பிரீத். குற்றச்செயல்களில் ஈடுபடுவதால், விவாகரத்து வேண்டும் என்று கீதா ஆலேக் (வயது 28) கேட்டு வந்தார். 2009ம் ஆண்டு நவம்பர் மாதம், ஒருநாள் பணி முடித்து, தனது மகன்களை அழைப்பதற்காக சென்றிருந்தபோது, மேற்கு லண்டனில் உள்ள கிரீன்ஃபோர்டு என்ற இடத்தில் கீதா, பட்டாக்கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டார். தலை மற்றும் வலக்கையில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு உயிரிழந்தார்.
இந்தக் கொலையை செய்ததாக கீதாவின் கணவர் சன்னி என்ற ஹர்பிரீத் ஆலேக், ஷேர் சிங் (வயது 19), ஜஸ்வந்த் தில்லான் (வயது 30) ஆகியோர், 2010ம் ஆண்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 2010 டிசம்பர் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கொலையில் உதவிய ஷேர் சிங் மற்றும் ஜஸ்வந்த் தில்லான் இருவருக்கும் 22 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கொலையை செய்த ஹர்பிரீத் ஆலேக்குக்கு 28 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
"பஞ்சாபை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியரான ஹர்பிரீத் ஆலேக், தன் எஞ்சிய சிறைவாசத்தை இந்தியாவில் கழிக்க வேண்டும் என்று ஐரோப்பிய அதிகாரிகளிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கைதிகளை திரும்ப பெறும் சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு அனுப்ப ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், ஹர்பிரீத்தை டெல்லி கொண்டு வரவும், அங்கிருந்து பஞ்சாப் காவல்துறையினர் அமிர்தசரஸ் கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்று பஞ்சாப் சிறைத்துறை உயர்அதிகாரி சஹோதா தெரிவித்துள்ளார்.