அமெரிக்காவில் ஓஹியோ மாநிலம் சின்சினாட்டி நகரில் கண் மூடித்தனமாக ஒருவர் சுட்டதில் மூவர் பரிதாபமாக பலியாகினர். அதில் ஒருவர் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளைஞர் ஆவார்.
சின்சினாட்டி நகரில் ஃபிப்த் தேர்ட் என்ற வங்கியின் தலைமையகம் உள்ளது. அங்கு வந்த ஒரு நபர், கையிலிருந்த துப்பாக்கியால் கண் மூடித்தனமாக சுட்டுள்ளார்.
ஐந்து பேர் மேல் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. சிலர் பலமுறை சுடப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் அந்த வங்கியில் ஆலோசகராக பணியாற்றி வந்த ஆந்திராவின் குண்டூரைச் சேர்ந்த பிருத்விராஜ் கண்டேபி என்ற 25 வயது இளைஞர் பலியாகியுள்ளார். அவருடன் லூயிஸ் ஃபெலிபி கால்டேரோன் (வயது 48), ரிச்சர்ட் நியூகம்மர் (வயது 64) ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவரை சுட்டுக் கொன்றனர். விசாரணையில் கொலையாளி பெயர் ஓமர் என்ரிக் சாண்டா பெரேஸ் என்பதும் 29 வயதான அவர் ஓஹியோவின் நார்த் பென்ட் நகரை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
ஓமர், அந்த வங்கியின் தற்போதைய மற்றும் முன்னாள் பணியாளர் அல்ல என்பதும், இந்த வெறிச்செயலில் ஈடுபடும் முன்பு பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சின்சினாட்டி நகர காவல்துறை தலைவர் எலியட் ஐசக் கூறியுள்ளார்.
நியூயார்க்கில் உள்ள இந்திய தூதர் சந்தீப் சக்ரவர்த்தி, காவல்துறையுடனும், கண்டேபியின் குடும்பத்தினரோடும் தாம் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பிருத்விராஜ் கண்டேபியின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர ஏற்பாடுகளை செய்து வருவதாக வட அமெரிக்க தெலுங்கு சங்கத்தை சேர்ந்த அலுவலர் ஒருவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.