தவறாக நிரப்பப்பட்ட மற்றும் போதிய ஆவணங்கள் இணைக்கப்படாத விசா விண்ணப்பங்களை நிராகரிக்கும் புதிய கொள்கையை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிபுகல் துறை (U.S. Citizenship and Immigration Services -USCIS) அறிமுகம் செய்துள்ளது.
ஹெச்-1பி மற்றும் கிரீன் கார்டு உள்ளிட்ட அனைத்து குடிபுகல் விண்ணப்பங்கள், கோரிக்கைகளையும் இப்புதிய விதி பாதிக்கும் என தெரிகிறது.
இதுவரை, விண்ணப்பத்தில் தவறு இருக்கும் பட்சத்தில் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் இத்துறை ஆதாரங்கள் கேட்பு அறிவிக்கை (Request for Evidence - RFE) அல்லது மறுக்கப்படுவதற்கான அறிவிக்கை (Notice of Intent to Deny - NOID) ஆகியவற்றை வழங்கும்.
2018 ஏப்ரல் 20ம் தேதி நிலவரப்படி, சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமையாகிய கிரீன்கார்டு உள்பட்ட விசாக்களுக்கு 6,32,219 இந்தியர் மற்றும் அவர்தம் வாழ்க்கை துணை, வயதுக்கு வராத குழந்தைகள் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.
"விண்ணப்பதாரர்கள் ஆதாரங்களை தேடி சமர்ப்பிப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், முழுமையாக நிரப்பாமல் விசா விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதை தடுப்பதற்காகவும் புதிய கொள்கை அறிமுகம் செய்யப்படுகிறது. அறியாமை மற்றும் ஆதாரங்கள் சமர்ப்பிப்பதை சரியாக புரிந்து கொள்ளாமையால் தவறு செய்வோரை பாதிப்புக்குள்ளாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை," என்றும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிபுகல் துறை தெரிவித்துள்ளது.
இப்புதிய விதியானது விசா பெறும் செயல்பாட்டை செலவு மிக்கதாகவும், நேரம் பிடிப்பதாகவும் மாற்றுவதோடு ஏற்கனவே அமெரிக்காவில் இருந்தபடி விண்ணப்பிப்போரின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலையையும் உருவாகும் என்றும் அஞ்சப்படுகிறது.
இப்புதிய விதி, சுற்றுலா மற்றும் வணிக பயணங்களுக்கான குறுகிய கால விசா நடவடிக்கைகளை பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.