பாகிஸ்தானில் பிரதமர் மாளிகையில் நவாஸ் ஷெரீப் ஆட்சியில் வாங்கப்பட்ட மூன்று எருமை மாடுகள் ரூ.23 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் புதிய பிரதமராக இம்ரான்கான் சமீபத்தில் பதவி ஏற்றார். இதன் பிறகு, சிக்கன நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டார். அதன்படி, பிரதமர் அலுவலகத்தில் இருந்த 61 சொகுசு கார்கள் ஏலம் விடப்பட்டன. இதன்மூலம், சுமார் ரூ.20 கோடி வருமானம் கிடைத்தது.
மேலும், கூடுதலாக 102 கார்கள், புல்லட் ப்ரூப் வாகனங்கள் மற்றும் 4 ஹெலிகாப்டர்கள் ஏலம் விடப்பட்டன.
இந்நிலையில், பிரதமர் மாளிகையில் நவாஸ் ஷெரிப் ஆட்சியில் வாங்கப்பட்ட மூன்று எருமை மாடுகள், 5 கன்றுகள் ஏலம் விடப்படுவதாக பிரதமர் இம்ரான் கான் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அதன்படி, நேற்று இஸ்லாமாபாத்தில் 3 எருமைகள், 5 கன்றுகளை ஏலம் விடப்பட்டன. இவை, ரூ.23 லட்சத்துக்கு 2 ஆயிரத்துக்கு ஏலம் போயின. இந்த எருமை மாடுகளை நவாஸ் ஷெரீப்பின் ஆதரவாளர்கள் வாங்கினர்.
இதில், ஒரு எருமையை நவாஸ் ஷெரீப்பின் ஆதரவாளர் குயால்ப் அலி ரூ.3 லட்சத்து 85 ஆயிரத்துக்கு வாங்கினார். 2 எருமைகள் மற்றும் 4 கன்றுகளை நவாஸ் ஷெரீப் கட்சி தொண்டர்கள் பாக்கர் வாரிக் என்பவர் ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்துக்கு வாங்கினார். மற்றொரு கன்று ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்துக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.