அமெரிக்கா, பாகிஸ்தானிற்கு கடுஞ்சொற்களையும், அவநம்பிக்கையையுமே அளித்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “தீவிரவாதத்தை ஒழிக்க கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 2லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு பதிலாக பொய்களையும், வஞ்சனைகளையுமே பாகிஸ்தான் திரும்பி வழங்கியுள்ளது. அமெரிக்க தலைவர்கள் முட்டாள்கள் என்று பாகிஸ்தான் நினைத்துக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொலைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹவாஜா அசிஃப், "இதற்கு மேல் நாங்கள் எதுவும் செய்யமாட்டோம் என்று அமெரிக்காவிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். அதனால், அவர்கள் குறிப்பிட்டுள்ள, `நோ மோர்` என்ற வார்த்தைகளுக்கு முக்கியதுவம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "அமெரிக்கா அளித்த உதவித்தொகை குறித்த அனைத்து விவரங்களையும் பொதுவெளியில் அளிக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது"` என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள, பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குர்ராம் டஸ்கிர் கான், "அமெரிக்கா, பாகிஸ்தானிற்கு கடுஞ்சொற்களையும், அவநம்பிக்கையையுமே அளித்துள்ளது. அமைதி, ஒழுக்கம் மற்றும் நாகரிகம் ஆகியவற்றின்மீது, பாகிஸ்தான் எந்த அளவிற்கு முனைப்புடன் உள்ளது என்பதை வெளிக்காட்ட வேண்டிய நேரம் இது" என்றும் அவர் கூறியுள்ளார்.