சட்டை போடணும், இட்லி சாப்பிடணும் என நீங்க சொல்லாதீங்க - குருமூர்த்திக்கு தினகரன் பதில்

நாங்கள் எங்கள் கட்சியில் கறுப்பு சட்டை போட வேண்டுமா, காலையில் இட்லி சாப்பிட வேண்டுமா என்பதையெல்லாம் நீங்க சொல்லாதீர்கள் என்று குருமூர்த்தி முகத்திற்கு நேராகவே கூறிவிட்டதாக தினகரன் தெரிவித்துள்ளார்.

Jan 3, 2018, 08:17 AM IST

நாங்கள் எங்கள் கட்சியில் கறுப்பு சட்டை போட வேண்டுமா, காலையில் இட்லி சாப்பிட வேண்டுமா என்பதையெல்லாம் நீங்க சொல்லாதீர்கள் என்று குருமூர்த்தி முகத்திற்கு நேராகவே கூறிவிட்டதாக தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ‘நியூஸ்18 தமிழ்நாடு’ தொலைக்காட்சிக்கு தினகரன் அளித்த பேட்டியில், “பாஜகவுக்கு தமிழ்நாட்டில் பிடிக்காத நபர்கள் சசிகலா, தினகரன். அதனால் எங்களோடு அவர்கள் வரமாட்டார்கள்; அது நடைபெறாத ஒரு விஷயம்.

பாஜகவே வந்து எங்களை அழைத்தாலும் நாங்கள் செல்ல மாட்டோம். பாஜகவுடன் எந்த காலத்திலும் ஒட்டோ உறவோ இல்லை. தினகரன் அரசியலில் இருக்கும் வரை அது நடைபெறவே நடைபெறாது; தான் அரசியலில் இருக்கும் காலம் வரை மதச்சார்பற்ற அணியில்தான் இருப்பேன்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ஸ்டெர்லிங் சிவசங்கரன் என்பவரின் அழைப்பு பேரில், லீலாபேலஸ் நட்சத்திர ஹோட்டலின் 9-ஆவது மாடியில், 2017 ஜனவரி 8-ஆம் தேதி ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தேன். அப்போது, குருமூர்த்தி எனக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதற்கு “நாங்கள் எங்கள் கட்சியில் கறுப்பு சட்டை போட வேண்டுமா, காலையில் இட்லி சாப்பிட வேண்டுமா என்பதையெல்லாம் நீங்க சொல்லாதீர்கள்” என்று முகத்திற்கு நேராகவே கூறிவிட்டேன். தங்கமணி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், குருமூர்த்தியை அவ்வப்போது, சந்தித்தார்கள். குருமூர்த்தி தில்லியின் ஏஜெண்டாக இருக்கிறார் என்பதும் பின்னரே தனக்கு தெரியவந்தது” என்றும் குறிப்பிட்டார்.

ஆர்.கே நகர் தொகுதி தேர்தல் தொடர்பாக கூறிய தினகரன், ”திமுக-தான் 2-ஆவது இடத்தை பிடிக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். திமுக டெபாசிட் வாங்காதது தனக்கும் வருத்தம்தான். திமுக சோம்பேறித்தனத்தை தவிர்த்து செயல்பட்டிருந்தால், அதிமுக டெபாசிட் வாங்கியிருக்காது; அதிமுக கோல்மால்களை செய்து டெபாசிட் வாங்கிவிட்டது” என்றும் கூறியுள்ளார்.

You'r reading சட்டை போடணும், இட்லி சாப்பிடணும் என நீங்க சொல்லாதீங்க - குருமூர்த்திக்கு தினகரன் பதில் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை