காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள 1600 வருடம் பழைமையான 117 கிலோ எடையுள்ள சிலையில், 1 சதவீதம் கூட தங்கம் இல்லை என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் திருவாச்சி காணாமல் போய்விட்டதாகவும், புதிதாகச் செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் சிலையில் குறிப்பிட்டபடி 5.75 கிலோ தங்கம் சேர்க்காமல் முறைகேடு நடந்துள்ளதாகவும் இரு வழக்குகள் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தலைமை ஸ்தபதி முத்தையா, கோயில் செயல் அலுவலர் முருகேசன், சிலை செய்த மாசிலாமணி உள்பட 9 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு பின்னர் சிலைகடத்தல் பிரிவுக்கு மாற்றப் பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் கடந்த சில வாரங்களுக்கு முன் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். வழக்கு தொடர்பான விவரங்களைச் சேகரித்த பின்னர் 4 பேர் கொண்ட குழுவினர் ஏகாம்பரநாதர் கோயில்களில் உள்ள சிலைகளை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2ஆம் தேதி) சோதனையிட்டனர்.
சுமார் 5 மணி நேரம் நீடித்த இந்தச் சோதனை ஏகாம்பரநாதர் ஆலயம், ஏலவார் குழலி அம்மன், சிலைகள் வைக்கும் அறை என மூன்று இடங்களில் நடைபெற்றது.
இதில் 1600 வருடம் பழைமையான 117 கிலோ எடையுள்ள சிலையில் 75 சதவீதம் தங்கம் (சுமார் 87 கிலோ) இருக்க வேண்டும். 1 சதவீதம் கூட தங்கம் இல்லை. மேலும் 67 கிலோ எடையில் புதியதாக செய்யப்பட்ட சிலையிலும் சுமார் 5.45 கிலோ தங்கத்திற்கு பதில் ஒரு சதவீதம் கூட இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.