இந்தோனேஷியாவில் விபத்துக்குள்ளான விமானம், புறப்படும்போதே சிக்கல்களை சந்தித்துள்ளது பதிவான தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
லயன் ஏர் நிறுவனத்தை சேர்ந்த 737 மேக்ஸ் 8 ரக விமானம் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் சொகர்னோ ஹமாட்டா சர்வ தேச விமான நிலையத்திலிருந்து காலை 6:20 மணிக்கு புறப்பட்ட விமானம் ஒரு மணி நேரம் பயணித்து, பங்கல் பினாங் என்ற இடத்தை அடைந்திருக்க வேண்டும். ஆனால் காலை 6:33 மணிக்கு விமானத்துடனான தொடர்பு அறுந்துவிட்டது.
விமான போக்குவரத்து குறித்த தகவல்களை தரும் FlightRadar24 என்ற இணையதளம் சார்ந்த சேவை மூலம்கிடைக்கும் தகவல்கள், விமானம் பறக்க ஆரம்பித்த உடனே தடுமாறியதை காண்பிக்கின்றன.
விமானம் மேலெழுந்து பறக்க ஆரம்பித்த இரண்டு நிமிட நேரத்தில் 2,000 அடி உயரத்தை எட்டியுள்ளது. பின்னர் 500 அடி கீழிறங்கி திரும்பவும் எழுந்து 5,000 அடி உயரத்தை அடைந்துள்ளது. அடுத்து 5,450 அடி உயரத்தை எட்டும் முன்னதாக மீண்டும் ஒருமுறை கீழிறங்கியுள்ளது. கடைசியாக 3,650 அடி உயரத்தில் 345 நாட் (1 நாட் என்பது ஏறக்குறைய 1.852 கி.மீ) வேகத்தில் பறந்து கொண்டிருந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
181 பயணிகள், 6 விமான பணியாளர்கள், 2 விமானிகள் ஆக மொத்தம் 189 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த அந்த விமானம் 13 நிமிடங்கள் மட்டுமே பறந்த நிலையில் நொறுங்கி கடலுக்குள் விழுந்துள்ளது. விபத்துக்குள் முந்தைய தினம் 13 நிமிட நேரத்தில் விமானம் 24,800 அடி உயரத்தை எட்டியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் செயல்பாட்டு வந்த இந்த விமானம், நல்ல நிலையில் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது.