இலங்கை நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட 10 தரப்பினர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவை திடீரென பதவி நீக்கம் செய்தார் சிறிசேனா. அவருக்குப் பதில் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக்கினார்.
ஆனால் ரணில் விக்கிரமசிங்கே தமக்கு 130 எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14-ல் கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே திடீரென நாடாளுமன்றத்தை சிறிசேனா கலைப்பதாக அறிவித்தார். இதனால் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிறிசேனாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட மொத்தம் 10 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.