இந்தியா அபாரம் வெறுங்கையோடு நாடு திரும்பிய மேற்கிந்திய அணி!

India defeat west indies T20 Cricket match

by Mari S, Nov 12, 2018, 09:39 AM IST

நேற்று நடந்த டி20 போட்டியின் இறுதி ஆட்டத்திலும் மேற்கிந்திய அணி தோற்று, வெறுங்கையோடு நாடு திரும்பியது.

இந்தியாவிற்கு கிரிக்கெட் போட்டியின் அனைத்து விதமான தொடர்களிலும் பங்கேற்க மேற்கிந்திய அணி கடந்த மாதம் வந்தது. டெஸ்ட் தொடரை 2-0 என இழந்தது. அதன் பின்னர் நடந்த ஒருநாள் போட்டி தொடரை 3-1 என போராடி தோற்றது. இதில், ஒரு போட்டியை டிரா செய்த மேற்கிந்திய அணி ஒரு போட்டியில் இந்தியாவை அசத்தலாக வென்றது.

இறுதியாக நடைபெற்ற 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என பறிகொடுத்து, எந்த தொடரையும் கைப்பற்ற முடியாமல் நாடு திரும்பியுள்ளது. டி20 போட்டியின் 3வது மற்றும் இறுதி ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது.

முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதால், இந்திய அணிக்கு இது பயிற்சி ஆட்டமாகவே இருந்தது. அதே சமயம் மேற்கிந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என கடுமையாகவே நேற்றைய போட்டியை விளையாடியது.

டாஸ் வென்ற மேற்கிந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் இருந்தே அந்த அணியின் வீரர்கள் அதிரடியாக விளையாடினர். டேரன் பிராவோ 43 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் ஆடிய நிகோலஸ் பூரன் 25 பந்துகளில் 53 ரன்களும் எடுத்து அசத்தினார். இருவரது அபாரமான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அந்த அணி 181 ரன்கள் எனும் கடின இலக்கை இந்தியாவுக்கு எதிராக நிர்ணயித்தது.

ஆனால், ஷிகர் தவானின் அதிரடி ஆட்டம், மேற்கிந்திய அணியின் வெற்றி கனவை தவிடு பொடியாக்கி விட்டது. 62 பந்துகளில் 92 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு பாதை அமைத்து கொடுத்து விக்கெட்டை இழந்தார் தவான். கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்களிலும், ராகுல் 17 ரன்களிலும், அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். ரிஷப் பன்ட் தவானுடன் பார்டனர்ஷிப் அமைத்து 58 ரன்கள் விளாசி அவுட்டானார். இறுதியில் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரையும் இந்தியா கைப்பற்றி மேற்கிந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது.

You'r reading இந்தியா அபாரம் வெறுங்கையோடு நாடு திரும்பிய மேற்கிந்திய அணி! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை