மகளிர் டி20 உலககோப்பையில் நேற்று நடந்த போட்டியில் இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் அணியை துவம்சம் செய்தது.
மகளிருக்கான ஆறாவது டி20 உலககோப்பை போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில், நியூசிலாந்தை வென்ற இந்திய மகளிர் அணி நேற்றைய போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது.
டாஸ் வென்ற இந்திய அணி பாகிஸ்தானை பேட் செய்ய பணித்தது. இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிஸ்மா மரூப் 53 ரன்களும் நிதா தர் 52 ரன்களும் அடித்து அந்த அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகினர்.
பின்னர் 134 ரன்கள் என்ற எளிய இலக்கை சேஸ் செய்த இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் விளாசி வெற்றிக் கனியை பறித்தனர். நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ் 47 பந்துகளில் 7 பவுண்டரிகள் விளாசி 56 ரன்கள் எடுத்தார். மந்தனா 26 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 14 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா வெற்றியை அடைந்தது.
இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதிய மற்றொரு போட்டி, மழையின் காரணம் ஆக ஒரு பந்து கூட வீசாத நிலையில் டிராப் ஆனது. இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.