அமெரிக்காவில் இண்டியானாபொலிஸ் என்ற நகரத்தில் இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கல்வி மையம் அமைய உள்ளது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இன்போசிஸ். அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கான விசா கிடைப்பதில் சிரமம் நிலவி வருகிறது. எதிர்காலத்தில் தங்களுக்கு அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு போதுமான தொழில்நுட்ப பணியாளர்களை உருவாக்கும் வண்ணம், இன்போசிஸ் நிறுவனம் அங்கு தனது கல்வி மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. இன்போசிஸ் நிறுவன பணியாளர்கள் மட்டுமன்றி, அந்நிறுவனத்தின் சேவையை பெறும் நிறுவனங்களின் பணியாளர்களும் தங்கி பயிற்சி பெறக்கூடிய பயிற்சி வளாகமாக செயல்படும்.
இண்டியானாபொலிஸில் இன்போசிஸ் மையம் ஒன்று கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. 2023ம் ஆண்டுக்குள் 3,000 அமெரிக்கர்களுக்கு இன்போசிஸ் வேலை தரும் என்று அப்போது கூறப்பட்டது. இதுவரைக்கும் 300 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மொத்தம் 245 மில்லியன் டாலர் முதலீடு செய்து இண்டியானாபொலிஸில் கல்வி மையத்தை அமைக்க இன்போசிஸ் முடிவு செய்துள்ளது. இண்டியானாபொலிஸ் சர்வதேச விமான நிலையம் முன்பு அமைந்திருந்த இடத்தில் இன்போசிஸ் கல்வி மையத்தின் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ள இந்தக் கட்டுமானப் பணியின் முதற்கட்டம், கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 16) அன்று ஆரம்பித்துள்ளது. 70.5 ஏக்கர் நிலப்பரப்பில் 1,25,000 சதுர அடியில் இந்த கண்டுபிடிப்பு மையம் அமையும். முதற்கட்ட பணிக்கு மட்டும் 252 கோடி ரூபாய் (35 மில்லியன் டாலர்) செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்கவிழாவில் உரையாற்றிய இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யூ.பி.பிரவீண், "தொடர்ந்து கற்றுக்கொள்வதும், திறமையை மெருகேற்றிக்கொள்வதும் இன்போசிஸ் நிறுவனத்தின் ஆதார தன்மைகளாகும்," என்று தெரிவித்தார்.