தென் அமெரிக்க நாடான பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் புதர் மண்டி கிடந்த இடத்தை புல்வெளியாக மாற்றுவதற்காக சுத்தம் செய்தவர்கள், அங்கு பெரிய பெரிய மண் கூம்புகளை பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். அவை கறையான் புற்றுகள் என்று தெரிய வந்தபோது ஆராய்ச்சியாளர்களும்கூட வியப்படைந்துள்ளனர்.கூகுள் எர்த் வசதியை பயன்படுத்தி மட்டுமல்ல, விண்வெளியில் இருந்தாலும் பார்வையில் தட்டுப்படக்கூடிய பிரமாண்டமான புற்றுகள் இவை. ஒவ்வொன்றும் 2.5 மீட்டர் உயரமும் 9 மீட்டர் குறுக்களவும் உள்ளதாக ஏறக்குறைய. 20 கோடி மண் மலைகளாக இவை காட்சியளிக்கின்றன.
"ஒரே வகையான கறையான் இனத்தால் இந்த பிரமாண்டமான புற்றுகள் உருவாக்கப்பட்டுள்ளன. காட்டிலுள்ள உலர்ந்த இலைகள் நேரடியாக, பாதுகாப்பாக புற்றுகளின் அடியில் கொண்டு வரப்படும் வண்ணம் இவற்றின் பாதை அமைக்கப்பட்டுள்ளது," என்று பிரிட்டனின் சால்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஸ்டீபன் மார்ட்டின் கூறியுள்ளார்.
உலகில் காணப்படும் பரந்த உயிரிதொழில்நுட்பமாக விளங்கும் இந்தப் புற்றுகளை உருவாக்குவதற்கு வெளியேற்றப்பட்ட மணலின் அளவு 10 கன மீட்டருக்கும் அதிகமாக இருக்கக்கூடும். அந்த அளவானது கிஸாவில் காணப்படும் பெரிய பிரமிடுகளைப் போல் 4,000 மடங்காகும் என்று கூறப்படுகிறது. பிரமிடுகளுக்கு ஒப்பாக இவையும் 4,000 ஆண்டுகள் காலத்தால் முந்தையவையாக இருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது. இவற்றில் 11 புற்றுகளின் நடுவில் இருந்து எடுக்கப்பட்ட மணல் மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்தியதில் அவை 690 முதல் 3,820 ஆண்டுகள் பழமையானவை என்று தெரிய வந்துள்ளது.
இந்த பிரமாண்டமான புற்றுகளைப் பற்றி இன்னும் பல்வேறு கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
4,000 பிரமிடுகளுக்கு இணையான கறையான் புற்று: பிரேசிலில் அதிசயம்!
Advertisement