பிரேசில் நாட்டில் இறந்த பெண்ணின் கருப்பையை தானமாக பெற்ற பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவ்விதத்தில் உலகில் வெற்றிகரமாக நடந்த முதல் சாதனை இதுவாகும்.
உயிருடன் இருப்பவர்களிடம் தானமாக பெற்ற கருப்பை மூலம் 2013ம் ஆண்டு ஸ்வீடன் தேசத்தில் முதல் குழந்தை வெற்றிகரமாக பிறந்தது. அம்முறையில் இதுவரை நடந்த 39 முயற்சிகளில் 11 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், இறந்த பெண்களிடமிருந்து பெறப்பட்ட கர்ப்பப்பையில் குழந்தையை பிறக்க வைக்கும் 10 முயற்சிகள் இதுவரை தோல்வியில் முடிந்துள்ளன. அமெரிக்கா, செக் குடியரசு மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் நடந்த இதுபோன்ற முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
"உயிருடன் இருக்கும்போது உறுப்பு தானம் அளிக்க முன்வருவோரின் எண்ணிக்கையை காட்டிலும் தாங்கள் இறந்த பிறகு உடல் உறுப்புகளை அளிக்க முன்வருவோரின் எண்ணிக்கை அதிகம்," என்று சௌ பௌலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும் இக்குழுவை வழிநடத்தியவருமான மருத்துவர் டேனி எஜ்ஜன்பெர்க் கூறியுள்ளார்.
மூளையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக உயிரிழந்த 45 வயது பெண்ணின் கர்ப்பப்பை 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 32 வயது பெண்ணுக்குப் பொருத்தப்பட்டது. பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாமல் இப்பெண் பிறந்திருந்தார். இரத்தநாளங்கள், பிறப்புறுப்பு பாதை என்று பல்வேறு நுணுக்கமான இணைப்புக்குப் பின் கருப்பை அவருக்கு பொருந்தியது. 35 வாரங்களும் 3 நாளும் நிறைவடைந்து கரு வளர்ந்த நிலையில் அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்தது. அப்பெண் குழந்தை, 2.550 கிலோ இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.