இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான், கடற்புலிகளின் தலைவர் சூசை உள்ளிட்ட 5 பேர் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் நாங்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது; பொட்டு அம்மான் தற்கொலை குண்டை வெடிக்க செய்து உயிரிழந்தார் என முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொட்டு அம்மான் நார்வேயில் உயிருடன் இருக்கிறார் என கருணா தெரிவித்த கருத்து இலங்கையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அப்போதைய ராணுவ தளபதியாக இருந்த சரத்பொன்சேகா நேற்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் சரத் பொன்சேகா கூறியதாவது:
இறுதி யுத்தத்தின் போது வடக்கு கடற்கரை மூலம் பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை உள்ளிட்ட 5 பேர் தப்பிச் செல்ல முயற்சித்தனர். நாங்கள் அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தினோம்.
இதில் பிரபாகரன், சூசை உள்ளிட்டோர் மரணித்தனர். பொட்டு அம்மான் தற்கொலை குண்டை வெடிக்க வைத்து உயிரிழந்தார். நந்திக் கடல் பகுதியில் பிரபாகரன், சூசை, பொட்டு அம்மானின் மனைவி ஆகியோரது சடலங்களை மட்டும் மீட்டோம்.
பொட்டு அம்மான் சடலம் கிடைக்கவில்லை. போரின் இறுதி நாட்களில் பிரபாகரனுடன்தான் பொட்டு அம்மான் இருந்தார். அவர் நார்வேக்கு தப்பி செல்லவே இல்லை.
இவ்வாறு சரத் பொன்சேகா கூறினார்.