அமெரிக்காவில் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள, இலங்கையின் முன்னாள் தூதுவரிடம் இருந்து, ராஜபக்ச ஆட்சிக்கால இரகசியங்களைக் கறக்கும் முயற்சிகளில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அமெரிக்காவுக்கான தூதுவராகப் பணியாற்றியவர் ஜாலிய விக்ரமசூரிய. இவர் மகிந்த ராஜபக்சவின், மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் உடன்பிறந்த சகோதரர்.
2008ஆம் ஆண்டு தொடக்கம், 2014ஆம் ஆண்டு வரை, அமெரிக்காவுக்கான தூதுவராக ஜாலிய விக்ரமசூரிய பணியாற்றியிருந்தார்.
இந்தக் காலகட்டத்தில், வாசிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கான கொள்வனவுகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான செலவுகளில் மோசடிகளைச் செய்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கிறீன் கார்ட் பெற்றுள்ள ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக, அமெரிக்க சட்டத்துறை அதிகாரிகள் வாசிங்டனில் உள்ள நீதிமன்றத்தில் ஐந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
பணச்சலவை மற்றும், குடிவரவுச் சட்ட மீறல்கள் தொடர்பாக இவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்ப முடியாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொள்வதற்கு, அமெரிக்க அதிகாரிகள் இரகசிய பேரத்தில் இறங்கியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த 2005 தொடக்கம் 2015 வரையான காலகட்ட இரகசியங்களை பகிர்ந்து கொண்டால், வாசிங்டன் நீதிமன்றத்தில் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை விலக்கிக் கொள்ளலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் அடுத்தவாரம் ஒரு வாய்ப்பை வழங்கவுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த பேரம் தொடர்பாக ஜாலிய விக்ரமசூரியவின் அமெரிக்க வழக்கறிஞருக்கும், இலங்கையில் உள்ள அவரது வழக்கறிஞருக்கும் இடையில், மின்னஞ்சல் மூலம் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.
இந்த பேரத்துக்கு ஜாலிய விக்ரமசூரிய, இணங்கி ராஜபக்ச ஆட்சிக்கால இரகசியங்களை வெளியிட்டால், வாசிங்டன் நீதிமன்றத்தில் அவர் சிக்கியுள்ள வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, ராஜபக்ச ஆட்சிக்கால இரகசியங்களை சேகரிப்பதில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளமை, ராஜபக்ச சகோதரர்களுக்கு இன்னும் நெருக்கடியை அதிகரிக்கச் செய்துள்ளது.