பிளாஸ்டிக் தடை: வியாபாரத்தை காக்கும் முயற்சியில் சிறுவணிகர்கள்!

Plastic ban reflects small businessmen trying to save business

by SAM ASIR, Jan 6, 2019, 14:21 PM IST

'கை வீசம்மா கை வீசு... கடைக்குப் போகலாம் கைவீசு' என்று வெறுங்கைகளோடு கடைகளுக்குச் சென்று பிளாஸ்டிக் கேரி பேக்குகளில் பொருள்களை வாங்கி வந்த காலம் முடிவுக்கு வந்துள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள நெகிழிகளுக்கான தடை, இயல்பு வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் நோக்கில் பிளாஸ்டிக்குக்கு விதிக்கப்பட்ட தடையை பெரும்பாலோனோர் வரவேற்கின்றனர். சிலரோ இந்தத் தடை சிறு வணிகர்களை மட்டுமே பாதிக்கிறது. பெரு நிறுவனங்களின் வர்த்தகத்திற்கு எந்தப் பாதிப்புமில்லை; அந்நிறுவனங்களின் தயாரிப்புகள் வழக்கம்போல் நெகிழி உறைகளிலேயே விற்பனையாகின்றன என்று கூறுகிறார்கள்.

பல உணவகங்கள், சிற்றுண்டி மற்றும் சாப்பாடு வாங்கிச் செல்வதற்கு பாத்திரங்களை கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புத் தள்ளுபடியை வழங்குகின்றன. சிறுவணிகர்களும் தங்கள் வியாபாரத்தை தக்க வைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தங்கள் பங்களிப்பாகவும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.
ஆம்பூர் அருகே உள்ள புது பெத்லகேம் என்ற பகுதியில் தேநீர்க்கடை நடத்தி வருபவர் சேட்டு என்ற முகமது கௌஸ். நான்கு ஆண்டுகளாக இவர் இக்கடையை நடத்தி வருகிறார்.

தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியானதால் சேட்டுவுக்கு நல்ல வியாபாரம் இருந்து வந்துள்ளது. தினமும் ஏறக்குறைய 500 பேர் இவர் கடைக்கு தேநீர் அருந்த வருவார்களாம். 400 தேநீர் பார்சல் என்ற வகையில் விற்பனையாகுமாம். மூன்று பேர் அருந்தக்கூடிய பார்சல் டீயின் விலை 10 ரூபாய். பிளாஸ்டிக் உறைகளில் டீ பார்சல் செய்யப்பட்டு தொழிற்சாலைகளுக்குள் கொண்டு செல்லப்பட்டு வந்துள்ளது. தினமும் 3,500 முதல் 4,000 ரூபாய் வரைக்கும் விற்பனையாகி வந்த தேநீர், பிளாஸ்டிக் தடைக்குப் பின்னர் 2,500 ரூபாயாக குறைந்து விட்டது. தேநீரை பார்சலாக வழங்குவதற்கு பிளாஸ்டிக் உறைகளை பயன்படுத்த முடியாத நிலையில் இத்தாக்கம் ஏற்பட்டுள்ளது.

சேட்டுவின் கடையில் மூன்று பேர் வேலை பார்த்து வரும் நிலையில், ஊதியம் வழங்கவும் பால் வாங்கவும் முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே, நண்பர்களின் ஆலோசனையின் பேரில் தனது வாடிக்கையாளர்களில் 150 பேருக்கு எவர்சில்வர் பாத்திரங்களை சேட்டு வழங்கியுள்ளார். இதற்கான முதலீடு 10,000 ரூபாய் ஆகிவிட்டபோதிலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தானும் பங்களிப்பு செய்துள்ளதாக மகிழும் சேட்டு, வாடிக்கையாளர்கள் இனி தான் வழங்கிய எவர்சில்வர் பாத்திரங்களில் தேநீரை வாங்கிச் செல்வார்கள் என்கிறார் நம்பிக்கையோடு!

பிளாஸ்டிக்கின் தீமைகளை கருதி, எதிர்கால நன்மையை கருத்தில் கொண்டு இத்தடையை வரவேற்க வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்புமாகும்.

You'r reading பிளாஸ்டிக் தடை: வியாபாரத்தை காக்கும் முயற்சியில் சிறுவணிகர்கள்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை