இலங்கைத் தலைநகர் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், இலகு ரயில் சேவை வலையமைப்பு திட்டம் இந்த ஆண்டில் செயற்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்துக்கு ஏற்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும், 1850 மில்லியன் டொலர், நிதியை கடனாக வழங்குவதற்கு ஜப்பான் முன்வந்திருப்பதாக, இலங்கையின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரின் மையப்பகுதியான, கோட்டையில் இருந்து, மாலபே வரைக்குமான, 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு, இந்த இலகு ரயில் சேவை வலையமைப்பு உருவாக்கப்படவுள்ளது.
இந்தப் பகுதியில், 16 ரயில் நிலையங்களும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு ஜப்பானின் ஜெய்கா என்ற முகவர் அமைப்பு தொழில்நுட்ப ஆலோசனைகளையும், கடனுதவியையும் வழங்கவுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த இலகு ரயில் சேவை திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன.
கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல், இலங்கை அரசாங்கம் திணறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.