கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வந்தவர் தினகரன் ஆதரவாளரான எம்எல்ஏ பிரபு. இனி இவர் ஆளும்கட்சியில் ஐக்கியமாவார் என்கிறார்கள் அதிமுகவினர்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தினகரனை சந்தித்து அவரது அணியில் இணைந்தார். தினகரன் அணிக்கு ஆதரவான நிலையை பிரபு எடுத்த பிறகு, அவருக்கு அரசு நிகழ்ச்சிகளுக்கு அதிகாரிகள் அழைப்பிதழ்கள் அனுப்பவதில்லை.
இதனையடுத்து, பிரபுவின் செல்வாக்கைக் குறைக்கும் வேலைகள் நடந்தன. தியாகதுருகம் அருகே குடியநல்லூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தபோது, தொகுதி எம்எல்ஏ வான பிரபுவுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை.
மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுக்காவிட்டாலும் விழாவில் பங்கேற்க உள்ளதாக பிரபு அறிவித்தார். இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸார் பிரபுவைக் கைது செய்தனர்.
அமமுகவிலும் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனால் எரிச்சலான ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அதில், விழுப்புரம் தெற்கு மாவட்டம் தியாக துருகம் ஒன்றிய இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ.பிரபு எம்.எல்.ஏ. (கள்ளக்குறிச்சி தொகுதி) இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்' எனக் கூட்டாக அறிவித்தனர்.
பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்கப்படவில்லை.
அவருடைய ஒரே கோரிக்கை, கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது. இதற்காகத்தான் அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் மோதி வந்தார். இந்தநிலையில் இன்று கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை அறிவித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இதன் அடுத்தகட்டமாக, மீண்டும் அதிமுகவில் இணைவார் பிரபு என்கிறார்கள் அதிமுகவினர்.
அருள் திலீபன்