முன்னாள் எம்.பி ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் வசமாக சிக்குகிறார் கருணாவின் கூட்டாளி பிள்ளையான்

Former MP Joseph Pararajasingham chases the assassination of Karunas Pillayan

Jan 10, 2019, 18:01 PM IST

தேவாலயத்தில் நடந்த நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது, இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனுடன் இணைந்து, தாங்கள் ஆறு பேரே படுகொலை செய்தோம் என்று, இரண்டு சந்தேக நபர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு, டிசெம்பர் 25 ஆம் தேதி, மட்டக்களப்பு நகரில் உள்ள மரியன்னை பேராலயத்தில் நத்தார் ஆராதனை நடந்து கொண்டிருந்த போது, துப்பாக்கிய ஏந்திய நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். கிழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கம் கருணாவின் தலைமையில் பிளவுபட்ட போது, அந்த அணியில் இடம்பெற்றிருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்டவர்களே இந்தப் படுகொலையில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகிறது.

இலங்கை இராணுவப் புலனாய்வுத்துறையுடன் இணைந்து இவர்கள் துணை ஆயுதக் குழுவாகச் செயற்பட்டிருந்தனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ்த் தேசியவாத தலைவர்கள் பலர் கிழக்கில் இந்த துணை ஆயுதக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கு, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது உரிய முக்கியத்துவம் அளித்து விசாரிக்கப்படவில்லை. 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கைப் படைகள் கைப்பற்றியதை அடுத்து, கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தி, அங்கு பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனை முதலமைச்சராகவும் நியமித்திருந்தார் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

2015ஆம் ஆண்டு, ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு தீவிர விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன், அவரது அணியைச் சேர்ந்த கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் எனப்படும், எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராஜா, கஜன் எனப்படும் ரங்கசாமி கனகநாயகம், இராணுவப் புலனாய்வு அதிகாரியான மீராலெப்பை கலீல் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் சந்திரகாந்தன் உள்ளிட்ட 6 ஆபர் ஈடுபட்டோம் என்று, முதலாவது, மற்றும் இரண்டாவது சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டு சாட்சியம் அளித்துள்ளனர்.

நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது, இந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுதந்திரமான முறையிலேயே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை, மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி இஸ்ஸதீன் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால், இந்த வழக்கில் இருந்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் தப்பித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் வழக்கு பெப்ரவரி 21ஆம், 22ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

You'r reading முன்னாள் எம்.பி ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் வசமாக சிக்குகிறார் கருணாவின் கூட்டாளி பிள்ளையான் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை