இலங்கையில் போர் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில், ரஷ்ய தயாரிப்பான அன்டனோவ்-32 விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்திய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் இரண்டு பேருக்கு 185 வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது நீதிமன்றம்.
இலங்கையில் போர் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில், விடுதலைப் புலிகளின் முற்றுகையில் இருந்த யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிக்கியிருந்த இராணுவத்துடன், தரைவழித்தொடர்பு இருக்கவில்லை.
அங்கு நிலைகொண்டிருந்த அரச படையினருக்கு விமானம் மற்றும், கடல் வழியாகவே அனைத்து போக்குவரத்துகளும் இடம்பெற்று வந்தன.
2000ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி, கொழும்பில் உள்ள இரத்மலானை விமானப்படைத் தளத்தில் இருந்து. அனுராதபுர விமானப்படைத் தளத்துக்குச் சென்று விட்டு பலாலி விமானப்படை தளம் நோக்கிப் பறந்து கொண்டிருந்த விமானப்படையின் அன்டனோவ் -32 விமானம் ஏவுகணை மூலம் சுட்டுவீழ்த்தப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த விமானியும், இலங்கையின் முப்படைகளையும் சேர்ந்தவர்களுமான 37 பேர் உயிரிழந்தனர்.
2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கிளிநொச்சியில் வைத்து, 2012ஆம் ஆண்டு இரண்டு முன்னாள் புலிப் போராளிகளை இலங்கை பொலிசார் கைது செய்தனர்.
இவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, அனுராதபுர மேல்நீதிமன்றத்தில் அவர்கள் இரண்டு பேருக்கு எதிராகவும்,விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தி, 37 பேரைக் கொலை செய்தார்கள் என்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களான, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவன் எனப்படும்,இராஜதுரை ஜெகன் (41 வயது) மற்றும் சின்னத்திலகன் எனப்படும், நல்லான் சிவலிங்கம் ஆகியோர், வில்பத்து சரணாலயத்தில் இருந்து தாமே அன்டனோவ் விமானத்தை சுட்டு வீ்ழ்த்தியதாக ஒப்புக் கொண்டிருந்தனர்.
இந்தநிலையில், நேற்று இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த அனுராதபுர மேல்நீதிமன்ற நீதிபதி, இரண்டு முன்னாள் புலிப் போராளிகளுக்கும் தலா 185 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
37 பேரின் மரணங்களுக்கும் தலா 5 ஆண்டுகள் வீதம் இந்தச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும், அனைத்து தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
185 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் புலிப் போராளிகள் இருவரும், ஏற்கனவே எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளதால், இந்தத் தீர்ப்பை அடுத்து விடுதலை செய்யப்படுவார்கள்.