துறைமுகங்கள், விமான நிலையங்கள் இந்தியாவிடம் அடமானம்? – இலங்கை நாடாளுமன்றத்தில் கேள்வி

எந்தவொரு துறைமுகத்தையோ, விமான நிலையத்தையோ அடமானம் வைத்து, இந்தியாவின் ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 400 மில்லியன் டாலரைப் பெறவில்லை என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மோசமடைந்துள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கை, 52 நாட்கள் நீடித்த அரசியல் நெருக்கடியினால், மிகமோசமான நிலையை எட்டியுள்ளது. இந்தக் காலப்பகுதியில், இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 1 பில்லியன் டாலராக வீழ்ச்சியடைந்தது. அரசியல் உறுதியற்ற நிலையினால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறிச் சென்றதாலேயே இந்த நிலை ஏற்பட்டது.

அதைவிட, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீனாவிடமும், ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களிடமும், பெறப்பட்ட கடன்களுக்காக, இந்த ஆண்டில் 2600 மில்லியன் டாலரைச் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையிலும் இலங்கை அரசாங்கம் இருக்கிறது.

இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு குறைந்துள்ளதால், இந்தியாவின் ரிசர்வ் வங்கி, 400 மில்லியன் டாலரை, சார்க் நாடுகளுக்கு இடையிலான நாணயப் பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது.

இந்த விவகாரம் நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.

மகிந்த ராஜபக்ச ஆதரவு, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நாடாளுமன்றத்தில் பேசிய போது, இலங்கையின் திருகோணமலை துறைமுகம், பலாலி விமான நிலையம், மத்தல விமான நிலையம், கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம் ஆகியவற்றை இந்தியாவிடம் அடமானம் வைத்தே, இந்தியாவின் ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 400 மில்லியன் டாலரை அரசாங்கம் பெற்றுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எந்தவொரு துறைமுகத்தையோ, விமான நிலையத்தையோ அடமானம் வைத்து, இந்திய ரிசர்வ் வங்கியிடம், 400 மில்லியன் டாலரைப் பெறவில்லை என்று கூறினார்.

சார்க் நாடுகளுக்கு இடையிலான நாணயப் பரிமாற்ற வசதியைப் பயன்படுத்தியே, இந்தியாவிடம் நிதியுதவி பெறப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதேபோன்று மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலும், உதவி பெறப்பட்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, இலங்கை நாணயத்தின் பெறுமதியை வலுப்படுத்துவதற்கு, சீனா மற்றும் ஜப்பானுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

இதனிடையே, அரசியல் நெருக்கடியினால், இடைநிறுத்தப்பட்ட நிதியுதவிகளை மீளப் பெறுவதற்கான முயற்சிகளிலும் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச கடந்த அக்டோபர் மாதம் பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து. அமெரிக்கா மிலேனியம் சவால் நிதியத்தின் ஊடாக வழங்கவிருந்த 450 மில்லியன் டாலர் நிதியுதவியை இடைநிறுத்திருந்தது.

சர்வதேச நாணயக நிதியமும், இலங்கைக்கான கடன் தவணையை இடைநிறுத்தியது. இதனால் 260 மில்லியன் டாலர் கிடைக்காமல் போயுள்ளது.

அமெரிக்காவினது நிதியுதவியையும், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியையும், மீளப் பெற்றுக் கொள்வதற்கான, பேச்சுக்களை நடத்துவதற்காக இலங்கையின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர இந்தவாரம் அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளார்.

இந்த ஆண்டில் முக்கியமான தேர்தல்கள் நடத்தப்படவுள்ளதால், வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவுத் திட்டத்தில் அதிக சலுகைகளை அறிவிப்பதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதற்கு, தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

Recent News