இலங்கையின் கிழக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநரை நீக்கி விட்டு புதிய ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் எனக் கோரி, மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழ்ப் பகுதிகளில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநராக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் நியமித்திருந்தார்.
இந்த நியமனம், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில், அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, தமிழர்களின் காணிகள், சொத்துக்களை அபகரிப்பது போன்ற அடாவடித்தனங்களில் ஈடுபட்டதாக கிழக்கில் உள்ள தமிழர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
1990களில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து, துணை ஆயுதக்குழுவொன்றை இயக்கி, தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது இருந்து வந்தது.
தமிழர்களுக்கு எதிராக இனவாத போக்கில் செயற்பட்டு வந்த ஹிஸ்புல்லாவை, கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை அதிபர் சிறிசேன நியமித்திருப்பதற்கு, தமிழ் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தநிலையிலேயே, ஆளுநர் ஹிஸ்புல்லாவை நீக்கி விட்டு புதிய ஆளுநர் ஒருவரை அதிபர் சிறிசேன நியமிக்க வேண்டும் என்று கோரி, மட்டக்களப்பு மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் போராட்டத்தினால், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்ப் பகுதிகளில் கடைகள், பாடசாலைகள், அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்துச் சேவைகளும் குறைவாகவே இடம்பெறுகின்றன.
எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில், வழமை நிலை காணப்படுகிறது.
புதிய ஆளுநருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் அமைப்புகளால், இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தனக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களுக்கு உள்நாட்டு அரசியல்வாதிகளும், வெளிநாட்டு சக்திகளும் துணைபோவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இனிவரும் காலத்தில், தாம் மூவின மக்களையும் சமமாக கருதி சேவையாற்றுவேன் என்று உறுதியளிப்பதாக கூறியுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கில் குழப்பங்களை ஏற்படுத்தாமல் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழுவதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் மத அமைப்புகள் உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையே, கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நேற்று மாலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.