போர்க்குற்றவாளிக்கு முக்கிய பதவி - தவறாகப் புரிந்து விளாசித் தள்ளிய அனந்தி சசிதரன்

இலங்கையில் 2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த இறுதிக்கட்டப் போரில், போர்க்குற்றங்களில் ஈடுபட்டார் என்று குற்றம்சாட்டு வரும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா என்ற இராணுவ அதிகாரி, இலங்கை இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளதற்கு மனித உரிமை அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய முன்னாள் வடக்கு மாகாண அமைச்சரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளவருமான அனந்தி சசிதரன், தவறான தகவல்களை வெளியிட்டு, தனது அவசரத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஒரு போர்க்குற்றவாளி எனவும், அவரை உயர் பதவிக்கு அதிபர் சிறிசேன நியமித்திருப்பது, ஒட்டுமொத்த போர்க்குற்றங்களுக்குமான பொறுப்புக்கூறலையும் கேள்விக்குள்ளாக்கியிருப்பதாகவும், அனந்தி சசிதரன் கூறியுள்ளார்.

போர்க்குற்றங்கள் உள்ளிட்ட, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்காது என்பதையே இந்த நியமனம் வெளிப்படுத்தியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், போர்க்குற்றவாளியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா முப்படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தவறான தகவலை அனந்தி சசிதரன் இந்த செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

இலங்கையின் முப்படைகளின் பிரதானி பதவியானது, இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் தளபதிகளை ஒருங்கிணைக்கும், இலங்கை அதிபருக்கு அடுத்த நிலையில், முப்படைகளின் மீதும் அதிகாரம் செலுத்தக் கூடிய பதவியாகும்.

முன்னாள் கடற்படைத் தளபதியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவே அந்தப் பதவியை இப்போது வகிக்கிறார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தலைமை அதிகாரி என்ற, இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவிக்கே நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சவேந்திர சில்வா, முப்படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று தவறாக புரிந்து கொண்டு, அனந்தி சசிதரன் செய்தியாளர் சந்திப்பில், அவருக்கு எதிராக விளாசித் தள்ளியிருக்கிறார்.

இறுதிக்கட்டப் போரில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையிலான 58 ஆவது டிவிசனைச் சேர்ந்த இராணுவத்தினரிடமே, அனந்தி சசிதரனின், கணவனான, விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல் பிரிவு பொறுப்பாளர்கள் எழிலன் சரணடைந்திருந்தார். எழிலனும் அவருடன் சரணடைந்த நூற்றுக்கணக்கான புலிகளும் இன்னமும் எங்குள்ளனர் என்று தெரியாத நிலையே காணப்படுகிறது.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்