இலங்கை அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் எண்ணத்தில் உள்ள அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க இப்போது கடுமையான சவாலாக மாறி வருகிறார். இதனால் இருவருக்கும் இடையில் பனிப்போர் மூண்டுள்ளது.
அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைவராக இருக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர், சந்திரிகா குமாரதுங்க. சந்திரிகாவின் தந்தையாரான சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார்.
அவருக்குப் பின்னர், சந்திரிகாவின் தாயாரான, சிறிமாவோ பண்டாரநாயக்க கட்சியின் தலைவராக இருந்தார். அதன் பிறகு சந்திரிகா அந்தப் பதவியில் இருந்தார்.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, பண்டாரநாயக்க குடும்பத்தின் கையில் இருந்து வந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை, மகிந்த ராஜபக்ச அதிபரான பின்னரே, கைமாறியது.
ராஜபக்ச கட்சித் தலைவரானதும், சந்திரிகாவை கட்சியில் இருந்து ஓரம்கட்டினார். எனினும், 2015இல் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர், அதிபரான சிறிசேனவை, கட்சியின் தலைவராக்கினார் சந்திரிகா.
சந்திரிகாவுக்கு நெருக்கமான விசுவாசியாக இருந்த சிறிசேனவை, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்துவதில் சந்திரிகா முக்கிய பங்காற்றியிருந்தார்.
எனினும், சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர், சந்திரிகாவுக்கும், சிறிசேனவுக்கும் இடையிலான நெருக்கம் குறையத் தொடங்கியது.
கடந்த அக்டோபர் 26 ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு, சிறிசேனவை கடுமையாக விமர்சித்து வந்தார் சந்திரிகா. அத்துடன், மீண்டும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை கொண்டு வருவதிலும் அவர் கவனம் செலுத்தியிருந்தார்.
மகிந்த ராஜபக்சவுடன், அதிபர் சிறிசேன ஒட்டிக் கொண்டதை அடுத்து, சந்திரிகா, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்.
கட்சியின் காப்பாளராக இருந்தபோதும், கட்சிக் கூட்டங்களுக்கு அவர் அழைக்கப்படுவதில்லை. இதனால் சந்திரிகா ஆத்திரமடைந்துள்ளார்.
கடந்த 8ஆம் தேதி, சுதந்திரக் கட்சியின் நிறுவுனரான பண்டாரநாயக்கவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு முன்பாக, அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது,.
இதில் அதிபர் சிறிசேன கலந்து கொண்ட போதும், சந்திரிகா குமாரதுங்கவை அவர் கண்டு கொள்ளவில்லை. சந்திரிகாவும் அவருடன் பேசவில்லை.
இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை வரும் தேர்தல்களில் போட்டியிடச் செய்வதற்கான முயற்சிகளைத் தோற்கடிக்கும் முயற்சிகளில் சந்திரிகா களமிறங்கியிருக்கிறார்.
தனக்கு நெருக்கமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்களைக் கொண்டு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சியை சிறிசேனவின் பிடியில் இருந்து விடுவிக்க போராடும், சந்திரிகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவும் உள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை கைப்பற்றும் முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில் சந்திரிகா குமாரதுங்கவை, நாடாளுமன்றத்துக்கு அனுப்பவும் ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருக்கிறது.
இதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நியமன உறுப்பினர் ஒருவர் விரைவில் பதவி விலகப் போவதாகவும், அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பகுதி எம்.பிக்களை, மகிந்த ராஜபக்ச தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் விட்டார். எஞ்சிய உறுப்பினர்களில் கணிசமானோரை சந்திரிகாவும் கொண்டு போய் விட்டால் அதிபர் சிறிசேனவின் பாடு திண்டாட்டமாகவே இருக்கும்.