மணல் கடத்தல்... அதிகாரியை கலங்கடித்த விவசாயி

அதிகாரியை கலங்கடித்த விவசாயி

மணப்பாறை அருகே சமாதானம் பேசவந்த பெண் அதிகாரியை கேள்வி கேட்டு விவசாயி மடக்கி பேசிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த ஆத்துப்பட்டி, ராஜகிரி, காக்காகுடி, புதுவயல், கத்தலூர், பூமரம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 6 மாத காலமாக மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை என தெரிகிறது.

இதனால் கோபம் அடைந்த அப்பகுதி விவசாயிகள், திடீரென 8 மணல் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். லாரியின் கண்ணாடிகளை அடித்து உடைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தகவல் அறிந்து அங்கு வந்த இலுப்பூர் கோட்டாட்சியர் ஜெயபாரதி, சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை ஏற்க மறுத்து விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டனர். அப்போது விவசாயி ராஜகோபால் என்பவர், கேள்வி கணைகளால் அதிகாரியை வறுத்தெடுத்தார்.

"பணி செய்ய விருப்பம் இருந்தால் செய்யுங்கள். மக்களுக்கு சேவை செய்யத்தான் அரசு ஊழியர்கள். மக்கள் கட்டும் வரி பணத்தில்தான் சம்பளம் வழங்கப்படுகிறது. வேலை செய்ய விருப்பமில்லை என்றால் சென்றுவிடுங்கள், மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற பலர் காத்திருக்கின்றனர்” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய பெண் அதிகாரி, வழக்கு பதிவு செய்து, சிறைபிடிக்கப்பட்ட 8 லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

You'r reading மணல் கடத்தல்... அதிகாரியை கலங்கடித்த விவசாயி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாஜகவுக்கு நகைச்சுவை உணர்வு மிகுதி - கலாய்த்த கனிமொழி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்